Saturday, November 23, 2013

ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் மசூர் மெளலானா உடனடி பதவி நீக்கம்!

Saturday, November 23, 2013
இலங்கை::ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராக செயற்பட்டு வந்த அப்துல் காதர் மசூர் மெளலானா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
 
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது;-
 
பல்வேறு மோசடிகளில் சம்பந்தப்பட்டமை தொடர்பாகவே அவர் பதவிநீக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவுக்கு வெள்ளைச் சந்தனம் கடத்தியமை, மியன்மார் அரசுக்கு பெருந்தொகை நிதியை சவூதி அரேபியாவிலிருந்து பெற்றுத்தருவதாக ஏமாற்றியமை தொடர்பாகவே இவர் பதவீநீக்கப்பட்டிருப்பதாக மேலும் தெரியவருகிறது.
 
கடந்தவாரம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெள்ளைச் சந்தனத்தை கடத்த முற்பட்டபோது, விமான நிலைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக இவரது வாகன சாரதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மியன்மாருக்குச் சென்றுள்ள இவர், அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபியாவிலிருந்து பெற்றுத்தருவதாக இவர் மியன்மார் அரசாங்கத்துக்கு வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமை தொடர்பில் மியன்மார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். இதுதொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரியவருகிறது.
 
இவர், முதற்தடவையாக சவூதி அரேபியாவின் பிரதிநிதியாக மியன்மார் சென்றவேளை இவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அஷ்ஷெய் மசூர் மெளலானா தற்போது சவூதியில் தலைமறைவாக இருப்பதாக விடயமறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
றிசானா நபீக்கை மீட்டெடுப்பதற்காக சவூதி அரேபிய முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இவருக்கு பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பதவியைப் பெற்று இவர் இதுவரைக்கும் உருப்படியாக எதனையும் செய்யவில்லை.
 
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு நேற்று இந்த அறிவித்தலை விடுத்தது.

No comments:

Post a Comment