Friday, November 22, 2013

மனித உரிமை மீறல் குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்!

Friday, November 22, 2013
சிங்கப்பூர்::இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், இலங்கையில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த, நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மார்ச் வரை அதற்கு கெடுவும் விதித்தார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நேற்று '2-வது தெற்காசிய டயஸ்பரா கன்வென்ஷன்’ என்ற பெயரில் நடந்த மாநாட்டில், மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதி ஒருவர், "சிறுபான்மை தமிழ்மக்கள் இன்னலுற்று வருகிற இலங்கையில் முதலீடுகள் செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ப.சிதம்பரம் பதில் அளித்துப் பேசுகையில் கூறியதாவது:-

தனது சொந்த நாட்டு மக்களுக்கும், உலகமெங்கும் உள்ள மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உண்டு. இந்த விஷயத்தில், மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்களை இலங்கை தண்டிக்க வேண்டும்.

மனித உரிமை மீறல் பிரச்சினையைப் பொருத்தமட்டில் எந்த நாடு, எந்த மக்கள் என்ற எல்லைகள் கிடையாது.

எனவே இதில் இலங்கை அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த சதிகாரர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

இப்படி கூறுவதால், இலங்கை பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடையக்கூடாது என்பது அர்த்தம் ஆகாது. இலங்கையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக்கூடாது என்றும் அர்த்தம் கொள்ளக்கூடாது. யாரும் தர்ம காரியங்களுக்காக முதலீடு செய்வதில்லை. லாபம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என கருதித்தான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வர்.

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கண்டறிவதில் தற்போதைய தோல்விக்காக, அந்த நாட்டுக்கு முதலீடுகள் போவதை தடுக்க வேண்டும் என நான் கருதவில்லை.

இந்தியாவில் 8 சதவீத வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஒப்பீடு செய்யத்தக்க அளவில் நல்ல லாபங்களும் வரும். எனவே முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குகிறது.

மிகப் பெரிய மற்றும் மிகச்சிறிய அளவிலான பொருளாதார அடிப்படை அம்சங்கள், இந்தியாவை முதலீடுகளை ஈர்க்கத்தக்க, பாதுகாப்பான முதலீட்டுத்தளமாக திகழச்செய்கின்றன.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment