Thursday, November 21, 2013

மதுரையில் மீண்டும் சதி வேலை: வக்கீல் காரில் குண்டு வெடித்ததில் போலீஸ் பக்ருதீன் கூட்டாளிகளுக்கு தொடர்பு!

Thursday, November 21, 2013
மதுரை::மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் வக்கீல் அக்பர் அலி. இவர் ஐக்கிய ஜமாத் மாநில துணைத் தலைவராகவும், நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.
 
நேற்று மதியம் நெல் பேட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு கீழே காரை நிறுத்தி விட்டு முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
 
அப்போது அவரது காரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. உடனடியாக வந்து பார்த்தபோது காருக்கு அடியில் பேட்டரிகள், காந்தம், சணல் கயிறு மற்றும் கருகிய மண்எண்ணை பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் வயர்கள் சிதறி கிடந்தன.
 
இதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விளக்குத்தூண் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் காரில் சோதனை நடத்தினர்.
 
விசாரணையில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்தது தெரியவந்தது. குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த காரை சற்றுதூரம் எடுத்து சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த காரில் வெடிகுண்டு வைத்த ‘மர்ம’ நபர்கள் முதலில் டீசல் டேங்க் மூடியை திறக்க முயன்றதாகவும், அது முடியாமல் போகவே காருக்கு அடியில் குண்டை காந்தத்துடன் இணைத்து வைத்து விட்டு சென்று உள்ளனர். சிறிது நேரத்தில் குண்டு வெடித்துள்ளது. காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
 
மதுரையில் மாட்டுத் தாவணி, அண்ணாநகர், புதூர் பஸ் டெப்போ ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு குண்டுகள் வெடித்தன. அதே ரக குண்டுதான் நேற்றைய சம்பவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
எனவே இந்த குண்டு வெடிப்பில் தற்போது போலீஸ் பிடியில் உள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
இதுதொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
குண்டு வெடிப்பு சம்பவம் என்பதால் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
இதுதொடர்பாக வக்கீல் அக்பர் அலியிடம் போலீசார் விசாரித்தனர். நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் கண்காணிப்பு காமிரா பொருத்த நான் ஆதரவாக இருந்தேன். இதனால் எனக்கும், சிலருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் ஒரு வழக்கு தொடர்பாக எனக்கு சில நாட்களுக்கு முன்பு ’மர்ம’ நபர்கள் போனில் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன். இந்த காரணங்களுக்காக என்னை மிரட்டுவதற்காக இந்த சதி வேலையில் சிலர் ஈடுபட்டு இருக்கலாம் என்று அக்பர் அலி போலீசில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment