Tuesday, November 19, 2013
இலங்கை::பிரித்தானியாவில் எஞ்சிப்போயுள்ள புலிகளைச் சாந்தப்படுத்துவதற்கே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பில் தனது அரசியல் விளையாட்டைக் காண்பித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கி வரும் உலகத்தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகியவற்றின் செல்வாக்கிற்குட்பட்டதாகவே கமரூனின் நிலைப்பாடு அமைந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென பிரித்தானிய அரசின் தூதுக்குழுவினர் கொழும்புக்கு வருகை தருவதற்கு முன்னர் லண்டனில் செயற்பட்டு வரும் மூன்று அமைப்புக்களின் பிரதி நிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததாகவும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டார்.
பொறுப்புக் கூறும் விவகாரங்களைக் கையாள்வதற்கான அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எடுக்காதுவிடின் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணையொன்றை நடாத்தக் கோரும் பிரேரணைக்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதான கமரூனின் எச்சரிக்கை குறித்து பாதுகாப்புச் செயலர் கருத்து வெளியிடுகையில்இ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ரஷ்யாஇ சீனா மற்றும் கியூபா போன்ற ஏனைய செல்வாக்குமிக்க நாடுகள் அங்கத்துவம் வகிப்பதனால் அங்கு பிரித்தானியாவினால் தனி வழியே செயற்பட முடியாத நிலையே ஏற்படுமெனவும் இலங்கை தற்போதும் தனது ஆளுமைக்குட்பட்ட நாடொன்றாக இருப்பதாகவே பிரித்தானியா தப்புக்கணக்கு போட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சிறுபராய தமிழ்ச் சிறுமிகளை புலிபயங்கரவாதிகள் தங்களுக்கென ஆட்சேர்ப்புச் செய்திருந்த புலிகளின் பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் உள்ளிட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே இலங்கையில் இழைக்கப்பட்டிருந்த அட்டூழியங்களுக்குப் பொறுப்பாளிகளாக விளங்கியதுடன் அவர்கள் தற்போது ஐக்கிய இராச்சியத்தில் பிரித்தானிய அரசின் ஆசீர்வாதத்துடன் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றரெனவும் தெரிவித்த அவர் பிரித்தானிய அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு பிரிவினர் எஞ்சியுள்ள புலிகளுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதுடன் தொழிற்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் ரையான் உலகத் தமிழர் பேரவையின் கொள்கை ஆலோசகராக செயற்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment