Wednesday, November 27, 2013

குண்டுவெடிப்பில் 6 பேர் பலி எதிரொலி கூடங்குளத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு இடிபாடுகளில் குண்டுகள் சிக்கின!

Wednesday, November 27, 2013
நெல்லை:இடிந்தகரை சுனாமி காலனியில் உள்ள வீட்டில் நேற்றிரவு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும், வெடிக்காத 4 குண்டுகள் சிக்கின. இதனால், அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. சம்பவம் தொடர்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மீது போலீசார் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், கூத்தங்குழியில் தாது மணல் நிறுவன ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே சமீப காலமாக கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இரு கோஷ்டிகளும் தங்கள் பலத்தை காட்ட அவ்வப்போது நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வீசி வந்தனர். இதில், ஒரு கோஷ்டியினர் இடிந்தகரை அருகேயுள்ள சுனாமி காலனியில் குடியேறினர்.

சுனாமி காலனியில் 450 தொகுப்பு வீடுகள் உள்ளன. நேற்று இரவு 7 மணிக்கு இங்குள்ள 319ம் நம்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. இதில் அந்த வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த கூத்தங்குழியைச் சேர்ந்த சகாயம் மகள்கள் சுபிதா (10), சுபிஸ்டன்(2) ஆகிய 2 குழந்தைகள் உடல் சிதறி பலியாயினர். பக்கத்து வீட்டில் பீடி சுற்றி கொண்டிருந்த தொம்மை மனைவி பிரமிளா(35) என்ற பெண்ணும் பலியானார். அடையாளம் தெரியாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் பலியானார்கள். இவர்கள் 5 பேரின் உடல்களும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. கூத்தங்குழியைச் சேர்ந்த சேவியர் மகன் வியாகப்பன்(37) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

குண்டு வெடிப்பில் காயம் அடைந்த இடிந்தகரை சுனாமி காலனியைச் சேர்ந்த சகாயம் மனைவி ரோஸ் (38), கூத்தங்குழி கீழத்தெருவை சேர்ந்த சேசு மரியசூசை (45) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்த கூத்தங்குழியை சேர்ந்த சந்தியாகு மிக்கேல் மகன் விஜய் (16) என்ற பாலிடெக்னிக் மாணவர் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இடிபாடுகளுக்குள் மேலும் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தால் நேற்று இரவு மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை வரை மோப்பநாய் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் 4 வெடிக்காத குண்டுகளை கண்டெடுத்தனர். அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டது.

இதே போல் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் இறந்து கிடக்கலாம் என்றும் தகவல் பரவியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு  போலீசார் மீண்டும் மீட்பு பணியை துவக்கினர். தீயணைப்பு வீரர்களும், மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து இடிந்தகரையில் இன்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஊரிலுள்ள சர்ச்சில் தொடர்ச்சியாக துக்கமணி ஒலிக்கப்படுகிறது.

இன்று காலையில், நெல்லை எஸ்.பி., விஜயேந்திரபிதரி தலைமையில் மோப்பநாய் பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் முன்னிலையில் போலீசார் வீடு வீடாக வெடிகுண்டுகள் சோதனை நடந்தது. இதில் ஏராளமான வெடிகுண்டுகள் சிக்கின.

கூடங்குளம் பகுதியில் பதற்றம் நீடிப்பதால் நெல்லை எஸ்பி விஜயேந்த¤ர பிதரி, தூத்துக்குடி எஸ்பி துரை ஆகியோர் தலைமையில் வள்ளியூர் டிஎஸ்பி ஸ்டான்லி ஜோன்ஸ், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ராஜபால் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்குழு மீது வெடிகுண்டு வழக்கு

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த உதயகுமார், புஷ்பராயன், முகிலன், கெபிஸ்டன் உள்ளிட்டோர் மீது வெடிகுண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள்கள் வைத்திருத்தல், நாட்டு வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இ.பி.கோ. 304, 121, 121ஏ, 345, 436 மற்றும் வெடிமருந்து தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி, இடிந்தகரையில் எஸ்.பி. விஜயேந்திரபிதரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

போராட்டக் குழுவினர் இப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு தொழிற்சாலையை நடத்தியுள்ளனர். இதற்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உதவியுள்ளனர். உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட பலர் மீது விஏஓ புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிகுண்டுகள் தேடுதல் வேட்டை நடக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

போலீசுக்கு ஒத்துழைப்பு உதயகுமார் பேட்டி

நெல்லை: இடிந்தகரையில் நேற்றிரவு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாயினர். அங்கு பதற்றம் நீடிக்கிறது. சம்பவம் குறித்து அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும், கிராம மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாது மணல் பிரச்னையில் இரு கோஷ்டிகளாக இருப்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ காரணம். இந்த சம்பவம் தொடர்பாக போலீசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment