Thursday, November 28, 2013
இலங்கை::30 ஆண்டுகால புலிபயங்கரவாத யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உயிரிழப்பு, பொருள் இழப்பு, காணிகளுக்கு ஏற்பட்ட சேதம் ஆகியவை பற்றிய மதிப்பீட்டை நாடு முழுவதும் மேற்கொள்வதற்கு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த மதிப்பீடு இன்று 28 ஆம் திகதி முதல் அடுத்த ஆறு மாதங்களுக்குள் செய்து முடிக்கப்படும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இத்தகைய ஆய்வொன்றை நாடெங்கிலும் நடத்த வேண்டுமென்று பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களின் தலைமையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயலணியொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த செயலணி தேசிய நடவடிக்கை திட்டமொன்றை தயாரித்து, இந்த காலப்பகுதியில் நாடெங்கிலும் இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அதனால் எத்தகைய சூழ்நிலையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன, பொதுமக்கள் எவ்விதம் காயமடைந்தார்கள், அவர்களின் சொத்துக்கள் எவ்விதம் இந்த யுத்தத்தினால் அழிவுற்றன போன்ற விபரங்களை திரட்டுவதற்கு நிபுணத்துவர்களை கொண்ட குழுவினர் ஆய்வொன்றை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியது.
இதனடிப்படையில் நாடெங்கிலும் 30 ஆண்டுகால யுத்தத்தினால் மரணித்தவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், ஊனமுற்றவர்களின் விபரங்களையும், சொத்துக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் பற்றிய விபரங்களை அறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களமும் கூட்டாக மேற்கொள்கின்றன. இந்த ஆய்வுகள் 1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு மே மாதம் வரை நடைபெற்ற சகல வன்முறைகளையும் உள்ளடக்குவதாக அமையும்.
இந்த ஆய்வுகள் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் மேற்கொள்ளப்படும். கிராம சேவகர் நியமிக்கும் கணக்கு சேமிப்பவர்கள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.சி.ஏ. குணவர்தன இந்த ஆய்வு 14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளில் நாடெங்கிலும் 16 ஆயிரம் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். கடந்த 30 ஆண்டு காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்பு, பொருள் இழப்பு பற்றி குடும்ப மட்டத்தில் இதன் மூலம் தகவல்கள் திரட்டப்படும்.
தற்போது தமது திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு 1982ம் ஆண்டு முதல் இன்று வரையில் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு தகவல் திரட்டு வதற்குரிய பயிற்சி அளிக்கப் படுகிறதென்று கூறினார். 30 ஆண்டுகால யுத்தத்தின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் சரியான முறையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.
ஐ. நா. அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யுத்தத்தின் கடைசி நாட்களில் சுமார் 40 ஆயிரம் பேர் மரணித்ததாக கூறுகின்ற போதிலும், வேறு சில சுயாதீனமான அறிக்கைகள் இக்காலப்பகுதியில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த குடிசன மதிப்பீட்டு ஆய்வினை வெற்றிகரமாக கிராம சேவக அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி, சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் தங்கள் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென்று அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments:
Post a Comment