Sunday, November 3, 2013

பி.எஸ்.எல்.வி சி25 ராக்கெட் கவுன்ட் டவுன் தொடங்கியது!!

Sunday, November 03, 2013
சென்னை::செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கல்யான் என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 56 மணி நேரம் கவுன்ட் டவுன் இன்று காலை 6.08 மணிக்கு தொடங்கியது. இஸ்ரோ சார்பில் இதுவரை 105க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கை கோள்களை எடுத்து சென்று விண்ணில் நிலை நிறுத்தி உள்ளன. இதில் அதிகளவில் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் வெற்றி பெற்றுள்ளன. கல்வி பயன்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, வாகனங்கள் கண்காணித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு இந்திய செயற்கை கோள்கள் பெரிதும் உதவி செய்து வருகின்றன.அந்த வகையில் இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஏவும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது. அதற்காக மங்கல்யான் என்று பெயரிடப்பட்டுள்ள
 
விண்கலம், மற்றும் இதர துணை அமைப்புகள், பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் ஆகியவை ரூ.450 கோடியில் வடிவமைக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் மூலம் மங்கல்யான் விண்கலம் புவி வட்டப்பாதை வரை கொண்டு செல்லப்படும். பின்னர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்கள் இயங்க தொடங்கி, புவி வட்டப்பாதையை கடந்து செவ்வாய் வட்ட பாதையில் விண்கலத்தை கொண்டு செல்லும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் மூலம் மங்கல்யான் விண்கலம் நாளை மறுநாள் பிற்பகல் 2.36 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் 2 ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அவற்றில் முதல் ஏவுதளத்தில் இருந்து மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்படுகிறது. இதற்கான 56 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 6.08 மணிக்கு தொடங்கியது.
 
மங்கலாயன் விண்கலம் செவ்வாயில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழ முடியுமா போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். விண்கலத்தில், லைமேன் ஆல்பா போட்டோ மீட்டர், மீத்தேன் சென்சார் கருவி என்ற தட்பவெப்ப ஆய்வு கருவி, மார்ஸ் எக்சாஸ்பியரிக் காம்போசிஷன் அனலைசர் என்ற சுற்றுச்சூழல் ஆய்வு கருவி, மார்ஸ் கலர் கேமரா எனப்படும் செவ்வாயின் தரை தளங்களை படம் பிடிக்கும் கேமரா, டி.ஐ.எஸ் என்ற ஸ்பெக்ட்ரோ மீட்டர் போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆன்டனாக்கள், சோலார் பேனல்கள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன.பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் கடந்த 18ம் தேதி விண்ணில் செலுத்துவதாக இருந்தது. ஆனால் திடீரென்று பைலின் புயல் தாக்கியதால் வானிலை நிலவரம் ராக்கெட் ஏவும் நிலையில் இல்லை. இதையடுத்து ராக்கெட் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment