Thursday, October 24, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம், அனைத்து கட்சிகளின் முழு ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் கொண்ட வந்த தீர்மானத்தில், தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும்; பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும்;
இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும்; இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த தீர்மானத்துக்கு திமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரவேற்கத்தக்கது : இந்திய கம்யூனிஸ்ட்!
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து மத்திய அரசை தமிழக எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதனை மத்திய அரசு ஏற்கும் வகையில் தமிழக எம்.பிக்கள் தான் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தமிழர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு பிரதமர் முடிவெடுப்பார் : பீட்டர் அல்போன்ஸ்!
தமிழக மக்களின் எண்ணங்களை சட்டப்பேரவை தீர்மானம் பிரதிபலிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரதமர் முடிவெடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் : திமுக!
தமிழக சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது. தீர்மானத்தை தொடர்ந்து மத்திய அரசு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீது பேசிய கே.பி. ராமலிங்கம் இவ்வாறு கூறினார்.
தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது தீர்மானம் : பாஜக!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தீர்மானம் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் பாராட்டத்தக்கது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய பல தீர்மானங்களை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்றும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment