Tuesday, September 24, 2013

இலங்கையில் தேர்தல் ஆணையாளருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: என்.கோபாலசுவாமி!

Tuesday, September, 24, 2013
இலங்கை::இலங்கையில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான மேலதிக அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் என்.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.

கௌரவமான நாடொன்றில் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், அனைத்து அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளதாக தெற்காசிய கண்காணிப்பாளர்கள் குழுவின் தலைவரான என்.கோபாலசுவாமி கூறியுள்ளார்.

தெற்காசிய கண்காணிப்பாளர்கள் குழுவின் தலைவரான கோபாலசுவாமி தலைமையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 19 கண்காணிப்பாளர்கள், தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இடம்பெறுவதில் எதிர்மறையான சில சம்பவங்கள் பதிவாகியிருந்தமையை எமது குழுவினர் அவதானித்துள்ளனர். இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணையாளர் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது குறைத்திருக்க வேண்டும். எனவே தேர்தலை மேலும் சிறப்பாக நடத்துவதற்கான அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டுமென எமது குழு கருதுகின்றது.

தேர்தலை நடத்துவதன் நோக்கம் அதுவாக இல்லாதபோதிலும், அது நியாயமாகவும், சுதந்திரமாகவும் இடம்பெறவேண்டும். நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், அனைத்து அதிகாரங்களும் தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. சிவில் நிர்வாகம் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் என அனைத்தும் தேர்தல்கள் ஆணையாளரின் கீழ், வருகின்றன. அவ்வாறு இருக்குமிடத்து, வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவர் வழிகாட்டல்களை வழங்குவார்''.

இதேவேளை, தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்துவது தேர்தல்கள் ஆணையாளரது பொறுப்பு மாத்திரமல்ல. அதனை பொலிஸ் திணைக்களமும், பாதுகாப்பு அமைச்சும் முன்னெடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment