Tuesday, September 10, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகள் அமைப்பை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முற்றாக விடுவித்துள்ளது: சம்பிக்க ரணவக்க!

Tuesday, September 10, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்  புலிகள் அமைப்பை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் முற்றாக விடுவித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
 
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
அரசியல் தீர்வு வழங்கப்படாத காரணத்தினால்  புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தியதாக கூட்டமைப்பு கூறியுள்ளது. புலிகளினால் கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் பற்றியும் ஒரு வார்த்தைக் கூட அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. நாட்டின் தலைவர்களை கூட்டமைப்பு  புலிகளுக்கு எதிரில் மண்டியிட வைத்துள்ளது.
 
இலங்கையில் போர் நடைபெற்ற போது நிராயுத பாணிகளான ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போரின் இறுதிக்கட்டத்தில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்பதை வலியுறுத்தி கூறுகிறோம். 7 ஆயிரத்திற்கு அருகில் ஒரு பூஜ்ஜியத்தை சேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை 70 ஆயிரமாக மாற்றியுள்ளது.
 
இதனை தவிர வடக்கில் இருந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை புலிகள் விரட்டியமை குறித்து எதனையும் குறிப்பிடாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கை தமிழர்களின் தாயகம் எனவும் சுயநிர்ணய உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
சுயநிர்ணய உரிமை என்பது தனியான நாட்டை ஏற்படுத்துவதற்காக இருக்கும் உரிமையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் மீண்டும் நாட்டை போர் ஒன்றுக்குள் தள்ள தயாராகி வருகிறார் என்றார்.
 
அதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில்:-
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பரஸ்பர விரோதமானது. அது தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல. அது சர்வதேசத்தின் திட்டம்.
 
கொழும்பு மாவட்டத்தில் சிங்கள மக்கள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் கொழும்பில் உள்ள தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கு செல்லுமாறு நாங்கள் கூறமாட்டோம்.
இதனால சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழும் உரிமையை இல்லாமல் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
 
வாக்காளர்களை இலக்கு வைத்து வெளியிடப்படாத உலகத்தில் ஒரே ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாகவே இருக்கும் என்றார் அமைச்சர் உதய கம்மன்பில.
 
 

No comments:

Post a Comment