Tuesday, September 10, 2013
இலங்கை::தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இனவாதத்தை தூண்டி விட்டு தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு சயனைட் வில்லைகளைக் கொடுத்து வடக்கை மீண்டும் கலவர பூமியாக்க கூட்டமைப்பு முயற்சிக்கக்கூடாது என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதால் வடக்கிற்கோ நாட்டிற்கோ, எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை. எவ்வாறாயினும் வடக்கில் இனவாத பிரிவினைவாத கொள்கைகளை பரப்பும் குழுக்களுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். தென்னிலங்கை மக்கள் மிகவும் பொறுமையுடன் செயற்படவேண்டும். தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சிக்கு இராணுவத்தினர் உதவிகளோ ஒட்டுக்குழுக்களின் ஆதரவோ தேவையில்லை.
அரசாங்கத்திற்கு விரல் நீட்டும் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட ஏனைய தரப்பினர் முப்பதாண்டு கால யுத்தத்தின் போது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கூறுகையில்:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இன்று முதல் வடக்கு தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்வார். சர்வதேச நாடுகள் வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் கூடிய அவதானம் செ
லுத்தியுள்ளன. அதேபோன்று பல குழுக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அரச ஊழியர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதாகவும் குற்றம் சுமத்துகின்றன.
வடக்கில் ஆளும் கட்சி உண்மையைக் கூறி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றது. 30 ஆண்டு கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டை அமைதியாக்கி வடக்கு மக்களுக்கு அனைத்து அடிப்படை உதவிகளையும் அரசாங்கம் செய்துள்ளது. இதில் ஒரு பகுதிக்கேனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இன்னும் 1971 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்திலேயே கூட்டமைப்பு தங்கியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீண்டும் வட்டுக்கோட்டை பிரகடனத்தை கையில் தூக்கிக் கொண்டு வடக்கில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றது. இதனை தோல்வியடையச் செய்யும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
தேர்தல் நடவடிக்கைக்காக அனைத்தையும் காட்டிக்கொடுக்க கூட்டமைப்பு முயற்சிக்கக்கூடாது. இனவாதத்தை தூண்டி விட்டு வடக்கில் இளைஞர், யுவதிகளை தூண்டிவிட்டு அங்கு மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த கூட்டமைப்பு முயற்சிக்கக்கூடாது
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஒஸ்லோ தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தேர்தல் விஞ்ஞானபனத்தை தயாரித்ததாக கூட்டமைப்பு கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் 2009 ஆம் ஆண்டின் அனைத்து கேள்விகளுக்கும் அரசாங்கம் பதிலளித்து தற்போது புதிய நோக்குடன் செயற்படுகின்றது எனக்கூறினார்.

No comments:
Post a Comment