Sunday, September 8, 2013

மாலத்தீவில் மீண்டும் அதிபராகிறார் நஷீத்!

Sunday, September 08, 2013
மாலத்தீவு::மாலத்தீவில் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீண்டும் அதிபராகிறார். அங்கு நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கையில் முதல் சுற்றில் அவர் முன்னணி வகிக்கிறார். மாலத்தீவில் அதிபர் தேர்தல் முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத், தற்போதைய அதிபர் முகமது வஹீத் ஹசன், முற்போக்கு கட்சியின் அப்துல்லா யேமன், ஜேபி கட்சியின் சார்பில் பிரபல தொழில் அதிபர் காசிம் இப்ராஹீம் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதற் சுற்றில் இருந்தே முன்னாள் அதிபர் முகமது நஷீத் முன்னணியில் இருந்து வருகிறார். தற்போது அவர் 45 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை எட்டியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் சுற்றில் முகமது நஷீத் 95,224 வாக்குகள் பெற்றுள்ளார்.

அவரைத்¢ தொடர்ந்து முன்னாள் அதிபர் அப்துல் கயூம் சகோதரர் அப்துல்லா யேமன் 25.35 சதவீத ஓட்டுகள் பெற்று 53 ஆயிரத்து 099 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காசிம் இப்ராஹிம் 24.07 சதவீதத்தில் 50, 422 ஓட்டுகள் பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் வஹீத் ஹசன் வெறும் 5.13 சதம் மட்டுமே பெற்று 10 ஆயிரத்து 750 வாக்குகள் பெற்று தோல்வி முகத்தில் உள்ளார். தேர்தலில் 80 சத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைமை தேர்தல் ஆணையர் புவாத் தவுபீக் கூறுகையில், ‘இது முதல் சுற்று முடிவுதான். மற்ற தீவுகளில் இருந்து வாக்கு பெட்டிகள் கொண்டுவரப்பட்டு சீட்டுகள் எண்ணும் பணி நடைபெறும். 2 நாட்களுக்கு பிறகுதான் முழுமையான முடிவுகள் தெரியும்’ என்று தெரிவித்தார். மாலத்தீவில் அதிபராக பதவி வகித்த முகமது நஷீத்தை அதிரடியாக நீக்கி விட்டு, துணை அதிபராக இருந்த முகமது வஹீத் அதிபராக பொறுப்பேற்றார்.

சர்வதேச நாடுகள் தலையிட்டு சமரசம் செய்தன. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக இருவரும் டெல்லி சென்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர். மாலத்தீவில் ஜனநாயகம் திரும்ப இந்தியா உதவும் என மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையர் சம்பத் மாலத்தீவு சென்று சிறப்பு பார்வையாளராக செயல்பட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்தினார். தற்போது பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னாள் அதிபர் முகமது நஷீத் வெற்றி முகத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment