Sunday, September 08, 2013
முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் இருமதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் புகைப்பட நிருபர் உள்பட 11 பேர் பலியாயினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் இருமதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் புகைப்பட நிருபர் உள்பட 11 பேர் பலியாயினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் மகாபஞ்சாயத்து அருகே பாசி கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்த பஸ் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் பரவியதை தொடர்ந்து, ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்களும், வன்முறைகளும் வெடித்தன. ஏற்கனவே ஆகஸ்ட் 27ம் தேதி இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் புகைந்து வந்தது. நேற்று பாசி கிராமத்தில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து முசாபர்நகர் மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் பரவத் தொடங்கின.
பாசியாகா கிராமம் அருகே கல்வீச்சு மற்றும் தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதில் கலவரக்காரர்கள் போலீசாரின் வாகனத்தை அடித்து உடைத்து தீ வைத்தனர். கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை படம் பிடித்து கொண்டிருந்த புகைப்பட நிருபர் ஒருவரை கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவர் ஐபி7 என்ற உள்ளுர் தொலைகாட்சி சேனலின் ராஜேஷ்வர்மா என்பது தெரியவந்துள்ளது. போலீசாருக்கு ஆதரவாக படம்பிடித்ததால் கும்பலால் தாக்கப்பட்டதாக போலீசார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த மீரட் ஐஜி தலைமையிலான அதிரடிப்படை வரவழைக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் டிஜிபி அருண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் நேற்றிரவு வரை கலவரம் நீடித்ததால், 28 கம்பெனி கலவர தடுப்பு போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற்ற இரு மத கோஷ்டியினர் மோதல் சம்பவத்தில் சச்சின், கவுரவ் ஆகிய 2 வாலிபர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பழிக்குபழியாக மற்றொரு தரப்பினர் மீது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த துணை ராணுவப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவங்களில் மட்டும் பல்வேறு இடங்களில் வன்முறைக்கு இதுவரை 11 பேர் பலியானதாகவும் 34 பேர் படுகாயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment