Sunday, September 08, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்கள தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ம் அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
நான்கு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையிலிருந்து அனுப்பி வைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த அமர்வுகளில் உயர்மட்டக் குழு பங்கேற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந் காலங்களில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீரிஸ், சட்ட மா அதிபர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளுக்கு உயர்மட்டக் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சார்பில் ரவிநாத் ஆரியசிங்க அமர்வுகளில் உரையாற்ற உள்ளார்.
இதேவேளை, அமர்வுகளில் பங்கேற்க தம்மை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரங்களுக்காக விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியிடம் கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவை சந்தித்து, ஜெனீவாவிற்கு தம்மை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் சமரசிங்க கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவினாத் ஆரயசிங்கவை விடவும் காத்திரமான முறையில் குற்றச்சாட்டுக்களுக்கு தம்மால் பதிலளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை நிலைமைகள் குறித்து அமர்வுகளில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment