Monday, September 16, 2013

கைதிகளை பார்க்க வரும் உறவினர்களின் போட்டோ கம்ப்யூட்டரில் பதிவு மத்திய சிறைகளில் விரைவில் அமல்!

Monday, September 16, 2013
சேலம்:சேலம் மத்திய சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்களை புகைப்படம் எடுக்கும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. இது அனைத்து மத்திய சிறையிலும் விரைவில் கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், பாளையங்கோட்டை, கடலூர் உள்பட 9 மத்திய சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் உள்ள கைதிகள் உள்ளே இருந்தே கொலை, கட்டப்பஞ்சாயத்து, சாட்சிகளை மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கைதிகளின் உறவினர்கள் என கூறிக் கொண்டு, வேறு ஆசாமிகள் வந்து சென்று கொலை சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகளை பார்க்க வருபவர்களை புகைப்படம் எடுக்க சிறைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது ஒரு கைதியை பார்க்க வேண்டும் என்றால், அதற்கான விண்ணப்பம் எழுதி கொடுக்க வேண்டும். ஒரு கைதியை 3 பேர் மட்டுமே பார்க்க முடியும். இனி மனு எழுதுவதற்கு பதிலாக அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். பின்னர் பார்க்க வரும் நபர்கள் புகைப்படும் எடுக்கப்படுவார்கள். உடனடியாக புகைப்படத்துடன் கூடிய ரசீது தரப்படும். இது சிறையின் உள்ளே இருக்கும் கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுக்கப்பட்டு கைதிக்கு தெரிவிக்கப்படும். பின்னர் அவர் அழைத்து வரப்படுவார். இந்த முறை சென்னை, திருச்சி சிறைகளில் இருக்கிறது. தற்போது சேலத்தில் துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறியது: கைதிகளை பார்க்க வருபவர்களை புகைப்படும் எடுக்கும் பணி இவ்வாரத்தில் நடைமுறைக்கு வந்து விடும். ஒரு முறை புகைப்படம் எடுத்த பிறகு, அடுத்த முறை பார்க்க வரும் போது அவரது பெயரை சொன்னால் முழு விவரமும் வந்துவிடும். ஆள் மாறாட்டமும், குற்றச் செயல்களும் முழு அளவில் தடுக்கப்படும். அனைத்து மத்திய சிறைகளிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment