Tuesday, September 24, 2013

இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை: சுதர்சன நாச்சியப்பன்!

Tuesday, September, 24, 2013
சென்னை::மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க முத்தரப்பு பேச்சுவார்த்தையை சென்னையில் டிசம்பர் மாதம் நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள வேறு சில கட்சிகளும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. இது சம்மந்தமாக நானும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் வலியுறுத்துவேன். அந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்திய மீனவர் பிரச்னைக்கு உறுதியாக தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.

இலங்கையில் வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. இனிமேல் இலங்கை அரசு அங்குள்ள மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். இந்திய அரசை பொறுத்தவரையில் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயல்பட்டு வருகிறது. அதேபோல் தொடர்ந்து செயல்படும். இனிமேல் இலங்கையில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசால் செலவிடப்படும் உதவித்தொகைகள் இலங்கையில் உள்ள தமிழ் மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி என்பது வெறும் கோஷம் தான். அது செயல்பாட்டுக்கு வராது. காங்கிரசை பொறுத்தவரையில் ராகுல் காந்தி தலைமையில் தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment