Saturday,September,14, 2013
வேதாரண்யம்::வேதாரண்யம் அருகே கோடியக்கரையில், இலங்கையைச் சேர்ந்த இருவர்,
மர்மமான முறையில் படகில் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மணவாய்க்கால் அருகே, நேற்று மாலை, 4:00 மணியளவில்,
இரண்டு பேருடன், இலங்கை படகு ஒன்று, திடீரென கரை ஒதுங்கியது. கோடியக்கரை
சுங்கத்துறை அதிகாரிகள், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், இவர்கள்
இருவரும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குரு நகரைச் சேர்ந்த ஆசீர்வாதம் மகன்
சிந்தாதுரை, 50, இவரது உறவினர் குமார் மகன் நிரஞ்சன், 24, என்பதும் தெரியவந்தது.
இதில், சிந்தாதுரை தன் தம்பிக்கு சொந்தமான கோகிலா என, எழுதப்பட்ட இன்ஜின் இல்லாத
பாய்மரம் பொருத்திய கார்னர் படகில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில்
புறப்பட்டுள்ளனர். அப்போது, கடலில் காற்று அதிகமாக இருந்ததால், படகு திசை மாறி
வந்ததாக இருவரும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் கூறினர். ஆனால், சுங்கத்துறை
அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், மதுரை திருமங்கலத்திலுள்ள இலங்கை தமிழர்
முகாமில் வசிக்கும் சிந்தாதுரை குடும்பத்தினரை, உரிய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள்
இல்லாமல் சந்திக்க வந்தது தெரியவந்தது.
பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய நாட்டின்
எல்லைக்குள் நுழைந்ததால், அதிகாரிகள், இருவரையும் பிடித்து, வேதாரண்யம் போலீசாரிடம்
ஒப்படைத்தனர். தங்கக்கட்டி கடத்தலுக்காக கடல் வழியாக படகில் வந்தனரா? மதுரையிலுள்ள
குடும்பத்தினரை காண வந்தனரா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
நடத்துகின்றனர்.

No comments:
Post a Comment