Monday, September 23, 2013
சென்னை::தமிழ்நாடு மற்றும் இலங்கையில் உள்ள மீனவ சமுதாயங்களிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை டிசம்பர் மாதம் சென்னையில் நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக பாரம்பரிய முறையில் பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கும்போது தாக்கப்பட்டு கைது செய்யப்படுவது குறித்து தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பது குறித்து இந்த கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. பாக்ஜலசந்தி பகுதியில் அவர்கள் இயல்பான முறையில் அமைதியாக தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே தொழில் செய்து வருகிறார்கள்.
இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மூல காரணம் இந்திய அரசுதான்.
இந்திய அரசின் தவறான ஆலோசனை மற்றும் தவறான முடிவு காரணமாக 1974ல் ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று அங்கீகரிக்கப்பட்டு இருப்பதே ஆகும்.
இந்திய அரசின் வரலாற்று தவறு காரணமாக இந்த பிரச்சனை பெரிதாகி பாக்ஜலசந்தி பகுதியில் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு இன்று வரை தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இதன் விளைவாக இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமை மிக மோசமான முறையில் விட்டுக்கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள் இலங்கை கடற்படையின் கொலை வெறி தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களின் கருணையை கேட்டு கெஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு இது இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏழை மீனவர்களின் பாரம்பரிய உரிமை மற்றும் வாழ்வாதாரம் ஒரு பிரச்சனை ஆக்கப்பட்டுவிட்டது. 1974ல் ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய மீன்பிடிக்கும் உரிமையை அனுபவித்து வந்த தமிழக மீனவர்கள் எந்தவிதத்திலும் கையெழுத்திடவில்லை.இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கிய கச்சத்தீவு பகுதியை சர்வதேச கடல் எல்லையாக இந்திய அரசு தீர்மானித்து இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகும் இது முடிந்து போன பிரச்சனை என்று இந்திய அரசு கூறியிருக்கிறது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் அதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசு ஆணை ஆகியவை அரசியல் சட்ட திருத்தம் இன்றி வெளியிடப்பட்டவை என்பதால் அவை சட்டவிரோதம் என்று அறிவிக்குமாறு நான் நீதிமன்றத்தில் கேட்டு இருப்பதோடு, கச்சத்தீவையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.
பூகோள ரீதியிலும், கலாச்சாரம் மற்றும் வரலாற்று ரீதியிலும் கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும். இந்தியாவின் லட்சக்கணக்கான மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை அடிப்படையாக வைத்து அந்தத் தீவை மீட்க வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சனை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கிறது என்பதையும் நான் உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இத்தகைய சூழ்நிலையில் கச்சத்தீவை விட்டுக்கொடுத்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருந்தும்கூட இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லைப் பிரச்சனை முடிந்துபோன ஒன்று என்று இந்திய அரசு தெரிவித்து இருப்பது முற்றிலும்ஏற்க முடியாததாகும்.
இதன் அடிப்படையில் கச்சத்தீவு நிரந்தரமாகவே கொடுக்கப்பட்டு விட்டது என கருதி பாரம்பரிய உரிமைப்படி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை அத்துமீறி வந்ததாக கூறுவது, கச்சத்தீவு மீதுள்ள இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகும். சிக்கலான இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்றால் கச்சத்தீவை திரும்பப் பெற்று அங்கு இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
கடந்த 2 1/2 ஆண்டுகளில் 39 வெவ்வேறு சம்பவங்களில் தமிழகத்தை சேர்ந்த 754 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். கைதான மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியா - இலங்கை இடையிலான கூட்டுக் குழு மற்றும் இருநாட்டு மீனவர் கூட்டுப் பணிக்குழு ஆகியவை மூலம் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த முயற்சிகள் அனைத்தும் பரிதாபகரமான தோல்வியை தழுவிவிட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த 97 மீனவர்கள் இன்னும் இலங்கை சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
2011 மே மாதத்தில் இருந்து இந்த பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தூதர கவாயிலாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு 26 முறை உங்களுக்கு கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் மிகவும் ஏமாற்றம் தரும் வகையில் இந்திய அரசு மவுனமாக இருந்துவிட்டு, மீனவர்களின் துயரத்தை போக்க சிறிதளவில்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதும்போது கூட 19.9.2013 அன்று 19 தமிழக மீனவர்களையும் அவர்களது 5 எந்திர படகுகளையும் பாக்ஜலசந்தி பகுதியில் இலங்கை கடற்படை கைப்பற்றி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே தமிழக மீனவர்களின் கஷ்டங்களை போக்க அமைக்கப்பட்ட கூட்டு பணிக் குழுவின் நோக்கம் நிறைவேறவில்லை. மீனவர்களின் துயரம் 2009ல் இலங்கை அரசு நடத்திய மனிதாபிமானமற்ற இனப்படுகொலையில் இருந்தே நீடித்துக் கொண்டிருக்கிறது.
2010 ஆகஸ்ட் மாதம் இருநாட்டு மீனவர்கள் அளவில் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையில் எங்கள் தரப்பில் 11 மீனவர்களும் இலங்கை தரப்பில் 15 மீனவர்களும் பங்கேற்றனர். இதேபோல் மீன் வளத்துறை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையின் அதிகாரிகளும் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள்.
இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை 2011 மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சில அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்களது சுய நலத்திற்காக இந்திய மீனவர்களின் குறிக்கோள்களையும், நலனையும் கெடுப்பதற்கு பலவந்தமாக முயற்சி செய்திருப்பதாக அறிகிறோம்.
எனினும் இரண்டாவது சுற்று பேச்சுவார்தை விபரம் இரண்டு ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை. இந்த நிகழ்வு பற்றிய விபரங்களை தமிழக அரசுக்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும்.
மீனவர்கள் மத்தியில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும், 2011 மார்ச்சில் டெல்லியில் 3வது கூட்டுப் பணிக்குழு கூட்டம் நடைபெற்றும் கூட 2011 மே மாதத்தில் இருந்து இதுவரை 57 தடவை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு 36 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெரும்பாலான தாக்குதல்களில் இலங்கை கடற்படையினரே ஈடுபட்டும்கூட இந்தியாவின் வெளியுறவுத் துறையும், கடலோர பாதுகாப்புத்துறையும் இதை மறுத்து வருவதுமட்டுமின்றி மறைமுகமாக இலங்கை அரசுக்கு ஆதரவு அளித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் அத்துமீறலை மிகவும் அதிகப்படியாகவே பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த ஏழை மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தொழில் செய்யும்போது தாக்கப்படுவது துயரமிக்க சம்பவம் ஆகும். மேலும் இந்த வன்முறை தாக்குதல்களை இலங்கை அரசே உருவாக்கி தமிழக மீனவர்களை நீண்ட காலமாக சிறைகளில் அடைத்துவிட்டு சுமூகமற்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. கடலோர மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை இருந்தும் கூட நாள்தோறும் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்று மீனவ சங்கங்கள் மாநில அரசிடம் முறையிட்டு இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதி மற்றும் இடத்தைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
தமிழக மீனவ சங்கங்களின் கருத்தையும், உணர்வுகளையும், விருப்பங்களையும் பரிசீலித்து, இந்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தொடர்பை இரு நாட்டு மீனவ சமுதாயங்களிடையே ஏற்படுத்தி அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்வதற்கு நான் திட்டமிட்டு இருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தையில் கீழ்கண்ட விபரங்கள் இடம்பெற வேண்டும் என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.
எங்கள் மீனவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல், கடத்தல், சிறைபிடிப்பு, நீண்ட நாட்களாக சிறையில் அடைப்பது போன்றவை தொடர்பாக முந்தைய பேச்சுவார்த்தைகளின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.
செயற்கையாக வரையறுக்கப்பட்ட கடல் எல்லையை கருத்தில் கொள்ளாமல் தமிழக மீனவர்களின் பராம்பரிய மீன்பிடிக்கும் உரிமைகளை நிலைநாட்டுதல்.
இலங்கை கடற்படையால் கடத்தப்பட்டு நீண்ட காலமாக தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது மற்றும் இலங்கை அதிகாரிகளால் படகுகள், மீன்பிடி சாதனங்களை கைப்பற்றுதல் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும்.
இந்த பிரச்சனையில் கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் எல்லை இறையாண்மை விவகாரத்தில் நான் எடுத்துள்ள நிலையை விட்டுக் கொடுக்காத நிலையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும்.
மீனவர்கள் அளவில் பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அர்த்தமுள்ள தீர்வுகள் ஏற்பட்டு மீனவர்களின் அன்றாட பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று நான் கருதுகிறேன். இந்த பேச்சுவார்த்தையை 2013 டிசம்பரில் சென்னையில் நடத்த நான் திட்டமிட்டு இருக்கிறேன். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தி உரிய அனுமதியை வழங்குமாறும், இலங்கை மீனவர்கள் தரப்பில் பங்கேற்போர் பட்டியலை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் அவர்கள் சென்னை வருவதற்கான அழைப்பை முன்கூட்டியே அனுப்ப முடியும்
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment