Monday, September 23, 2013

மாகாண சபைத் தேர்தலில் அதிக மக்கள் பங்கேற்றமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: அமெரிக்கா!

Monday, September 23, 2013
US:மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றமையானது ஜனநாயக நடைமுறைக்கு கிடைத்த வெற்றியென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
 
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இலங்கைகான அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் தொடர்பில் இலங்கையை பாராட்டுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
 
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நான்காண்டுகள் கடந்துள்ள நிலையில், வட மாகாணத்தில் உயரிய சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிக்கவும், நல்லிணக்க நடைமுறையை முன்னெடுப்பதற்கும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இன்றிய செயற்பாடுகள் அவசியமாகும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதற்கான ஆரம்பமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
ஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தல்களுடன் நின்றுவிடுவதில்லை என்பதுடன், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் தமக்கு உரித்துடைய சமாதானம் மற்றும் கௌரவத்துடன் வாழத்தக்க வகையில் இன்னும் அதிகமான செயலாற்ற வேண்டியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
 
எவ்வாறாயினும், பதிவாகியுள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் கரிசனை கொண்டிருக்கும் அதேவேளை, வெவ்வேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன்பாக விரைவில் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment