Thursday, September 26, 2013

இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி சிறப்பு முகாமை மூட அரசு முடிவு: கும்மிடிப்பூண்டிக்கு மாற்ற கோரினால் பரிசீலிக்க உத்தரவு!

Thursday, September 26, 2013
சென்னை::சென்னையை அடுத்த, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமை மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளதால், அங்குள்ளவர்கள், கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக் கோரி மனு அளித்தால், அதை, அரசு பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி சிறப்பு முகாமில், (புலிகள் ஆதரவு) இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை, மூடிவிட, அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, முகாமில் இருப்பவர்களை, வேறு சிறப்பு முகாம்களுக்கு மாற்றுவது என, அரசு பரிசீலித்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்குமார் என்பவர், தாக்கல் செய்த மனுவில், 'முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உதவி இல்லாமல், என்னால் வாழ முடியாது. திருச்சி முகாமுக்கு அனுப்பக் கூடாது; கும்மிடிப்பூண்டி அல்லது புழல் முகாமுக்கு மாற்ற வேண்டும்' என,கூறப்பட்டுள்ளது.
 
இம்மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், கூடுதல் அரசு பிளீடர் எம்.எஸ்.ரமேஷ் ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: பூந்தமல்லி சிறப்பு முகாமை மூடுவதற்கு, அரசு முடிவெடுத்துள்ளது. அந்த இடத்தில், சைதை கிளை சிறையில் உள்ள, சிறுவர்களை தங்க வைக்க, அரசு கருதுகிறது. முகாம் அருகில் வசிக்கும் குடும்பத்தினரை சந்திக்க, அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. முகாமில் உள்ளவர்கள், சிறைவாசிகள் அல்ல. பல்வேறு காரணங்களுக்காக, இவர்களை முகாம்களில் அரசு வைத்துள்ளது.
 
அடிப்படை உரிமைகளைப் பெற, இவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக் கோரி, அரசிடம் இவர்கள் மனு அளிக்கலாம். அவ்வாறு அளிக்கும்பட்சத்தில், அதை அரசு பரிசீலித்து, பைசல் செய்ய வேண்டும். அரசு முடிவெடுக்கும் வரை, முகாமில் இருப்பவர்களை அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment