Sunday, September 8, 2013

புலிகளால் கொல்லப்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றியும், புலிகளைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை வழங்கி அரசியல் புகலிடம் பெற்று இன்று வெளி நாடுகள் பலவற்றிலும் உல்லாசமாக வாழ்ந்துவரும் புலிகள் ஆதரவு ஊடகவிய லாளர்கள்!

Sunday, September 08, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையிலான இன்றைய அரசாங்கத்தினால் நமது நாட்டில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊடகச் சுதந்திரத்தை ஒருசில சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தவறாகப் பயன்படுத்திய ஒரு சோகச் சம்பவம் கடந்த வாரம் இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகப் பதிவாகிவிட்டது.

இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் உயர்மட்டக் குழுவைச் சந்தித்த நமது நாட்டின் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் குழுவில் கலந்து கொண்ட ஒருசிலரால் உண்மைக்குப் புறம்பான முறையில் திரிபுபடுத்தப்பட்டுக் கூறப்பட்ட சம்பவம் நாட்டிலுள்ள சகல ஊடகவியலாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளது.  ஐ.நா உயரதிகாரிகளுடன் இந்தத் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்துரையாடுகையில் ஒரு பக்கச் சார்பாகவே தமது கருத்துக்களை முன்வைத்ததுடன்  புலிகளால் கொல்லப்பட்ட மற்றும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து மெளன மாகவும் இருந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது தமது பக்கச்சார்பு உரை யாடலுக்கு உரம் சேர்க்கும் வகையில் நடைபெறாத சில சம்பவங்க ளையும் கற்பனையில் உருவாக்கி அரசாங்கப் படைகள் மீது குற்றம் சுமத்தியும் உள்ளனர்.  திருகோணமலையில் பிராந்திய ஊடகவியலாளராக இருக்கும் ஒருவரது தனிப்பட்ட அவரது பிரச்சினையை ஊடகப் பிரச்சி னையாக்கி அதற்கு கை கால் வைத்து ஐ.நா பிரதிநிதிகளிடம் தெரி வித்துள்ளமை ஊடகத்துறையிலுள்ளவர்களை மட்டுமல்லாது பல் வேறு தரப்பினரையும் முகஞ்சுழிக்க வைத்துள்ளது. பொலிஸ் நிலை யத்திற்கே செல்லாத ஒரு விடயத்தை இச்சிலர் ஊதிப் பெருப் பித்துள்ளனர்.

சர்வதேசத்திற்கே அச்சுறுத்தலாக இருந்த முப்பது வருடகாலப் பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இன்றைய அரசாங்கத்தைப் பாராட்டுவதை விடுத்து குற்றம் கண்டு பிடிப்பதிலேயே குறியாக நிற்கும் ஐ.நா சபையின் அதிகாரிகளிடம் அவர்களது தேடலுக்குத் தீனி சேர்ப்பது போல தமிழ் ஊடக முக்கியஸ்தர்கள் சிலர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியதாகவே கருதப்படுகின்றது.  உண்மையை பக்கச் சார்பின்றி எடுத்துரைத்திருந்திருந்தால் அதில் தவறு கண்டுபிடிக்க முடியாது, கண்டு பிடிக்கவும் கூடாது. ஆனால் இங்கு பக்கச் சார்புடன் மட்டும் நின்றுவிடாது சோடனைக் கதைகளும் கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் எனும் மகுடத்தைச் சுமந்து நாட்டின் இறைமைக்கு மதிப்பளிக்காது இவர்களில் ஒருசிலர் நடந்துள்ளனர்.

புலிகளால் கொல்லப்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றியும், புலிகளைப் பயன்படுத்தி பொய்யான தகவல்களை வழங்கி அரசியல் புகலிடம் பெற்று இன்று வெளி நாடுகள் பலவற்றிலும் உல்லாசமாக வாழ்ந்துவரும் ஊடகவியலாளர்கள் பற்றியும் இவர்கள் ஐ.நா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தால் அது நியாயமான சந்திப்பாக அமைந்திருக்கும்.  வெளியே கசிந்த இந்த இரகசியச் சந்திப்புத் தொடர்பான உண்மை களைக் கூட ஊடகச் சுதந்திர மீறலாகவே இந்த சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் குழுவிலுள்ள சிலர் கருதக் கூடும். உண்மை அது வல்ல. ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகவியலாளனுக்கு மட்டுமல்ல ஒரு பொது மகனுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதில் எவரும் தலையிட முடியாது. ஆனால் அதேவேளை அவனுக்கு தாய்நாட்டுப் பற்றும், தனது தாய்நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் தார்மீகக் கடப்பாடும் அதனைவிடவும் மேலாக இருக்க வேண்டும்.

இதிலிருந்து இந்த சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் குழுவிலிருந்த சிலர் தவறிவிட்டனர். இல்லாத விடயம் ஒன்றைக் கூறி நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திவிட்டனர். தம்மைத் தனிப்பட்ட முறை யிலோ அல்லது தாம் சார்ந்த ஊடக நிறுவனத்தையோ முதன்மைப் படுத்துவதற்காக இச்சிலர் ஊடக தர்மத்திற்குத் துரோகம் இழைத்து விட்டனர் என்று கூறினாலும் அதில் தவறில்லை. இதனை இந்த ஒரு சிலரால் எவ்வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.  இத்தவறுக்காக இதனைச் செய்தவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தாம் தவறிழைத்துவிட்டோம் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இல்லையேல் தமிழ் ஊடகத் துறையில் தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தவிடுபொடியாகிவிடும். உங்கள் ஊட கங்களில் உங்களால் வெளியிடப்படும் செய்திகளும் இதுபோன்ற கற்பனைக் கதைகள் என்ற கணிப்பே பொதுமக்களிடத்தில் பரவிவிடும். அதன் பின்னர் ஹீரோவாக இருக்க முனையும் நீங்களும் உங்கள் ஊடகங்களும் சீரோவாகி விடுவீர்கள் என்பது மட்டும் நிஜம்.

அறிந்தோ அறியாமலோ அல்லது தெரிந்தோ தெரியாமலோ செய்த இத்தவறினை மூடி மறைக்க முனைந்தாலும் குற்றம் குற்றமே. அதிலிருந்து தப்பிக்க முயலக் கூடாது. தவறைத் தவறென்று ஒத்துக் கொண்டு அரசாங்கத்திடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். அதுவே இதற்கான பிராயச்சித்தமாக அமையும்.
 

No comments:

Post a Comment