Sunday, September 8, 2013

நாகை கடற்கரை பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல்? பின்னணியில் அதிர்ச்சி!

Sunday, September 08, 2013
நாகை::ஒரு காலத்தில் புலிகள் மற்றும் இலங்கை தமிழ் போராளிகளின் முக்கிய தளமாக இருந்த நாகை மாவட்டத்தில், மீண்டும் கடத்தல் தொழில் கொடி கட்டிப்பறக்க துவங்கி விட்டதோ என்ற சந்தேகம், மத்திய, மாநில உளவு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில், கடத்தல் தங்க கட்டிகள் தொடந்து பிடிபடுகிறது. இது தொடர்பாக, மாவட்ட போலீசார் மற்றும், வருவாய் புலனாய்வுத் துறையினர், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இலங்கையில் போராளிகள் ஆதிக்கம் உச்சகட்டத்தில் இருந்த போதும், அதற்கு முன்பும் நாகை மாவட்டம், கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. இலங்கையில் போர் ஓய்ந்ததும், நாகை உட்பட, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கடத்தல்காரர்களின் நடமாட்டம் ஓய்ந்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கு எப்போதும் இல்லாத வகையில், சமீபத்தில் கடல் வழியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பான, எச்சரிக்கை தொடர்ந்து விடுக்கப்பட்டது. கடற்படை உளவுப்பிரிவு, மத்திய உளவுப்பிரிவு சார்பில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழகத்தில், தற்போது வரை, "அலர்ட்' அமலில் உள்ளது. சமீபத்தில், நாகை மாவட்டம், கோடியக்கரையில் பிடிபட்ட, சொகுசு படகு ஒன்றை இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படகை, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோர் சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

பிஸ்கட்கள்:

இந்நிலையில் தான், இம்மாதம் முதல் தேதி, திருக்குவளையில், இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, 16.5 கிலோ தங்க பிஸ்கட்களை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடித்தனர். இந்த சம்பவத்தில், ராஜிவ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவரும், பிரபல கடத்தல் புள்ளியாக இருந்து, பின்னர் இறந்த, கோடியக்காடு சண்முகத்தின் உறவினர் நால்வரை போலீசார் பிடித்து, திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இப்பகுதியில் தங்கம் பிடிபடுவது முதல் முறையல்ல; முன்னதாக பல முறை தங்கம் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, 1991 வரை, கோடியக்கரை பகுதியில் சண்முகம் தான் கடத்தலில் கோலோச்சி வந்தார்.

இலங்கை:

கடந்த, 2011, நவம்பர், 11ம் தேதி, இலங்கையில் இருந்து கோடியக்கரை வழியாக, காரில் சென்னைக்கு கடத்தப்பட்ட, 15.6 கிலோ தங்க கட்டிகள், பிடிபட்டன. அதன் பின், கடத்தல் சிறிது காலம் நின்ற நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக கடத்தல் தங்கம் அதிகளவில் பிடிபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன், 15ம் தேதி, இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 21 கிலோ தங்கம் வருவாய் புலனாய்வு பிரிவினரால், பிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், கோடியக்காடு சண்முகத்தின் மகன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின், கடந்த மாதம், 15ம் தேதி, இலங்கையில் இருந்து கோடியக்கரை வழியாக, திண்டுக்கல்லுக்கு கடத்தப்பட்ட, 3.5 கிலோ கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பிடித்தனர். இதில், சுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பிடிபடும் இந்த தங்கம், கோடியக்கரை சண்முகத்தின் உறவினர்கள் மூலமே கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், உள்ளூர் போலீசாருக்கு தெரியாமல், வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு, சண்முகத்தின் குடும்பத்தில் எதிரெதிராக செயல்படுபவர்கள், ஒருவரை ஒருவர் மாட்டிவிடும் நோக்கில், காட்டிக் கொடுத்துள்ள தகவலும் தற்போது கூறப்படுகிறது. இது தவிர, கோடியக்கரை வழியாக கடத்தப்படும் தங்கம், வருவாய் புலனாய்வுத் துறையினரால் பிடிக்கப்படும் போது, இடத்தை மாற்றி காட்டுவதாகவும், பிடிபடும் தங்கத்தை குறைத்து தெரிவிப்பதாகவும், அப்பகுதி மக்களே குற்றம் சாட்டி வருகின்றனர்.

கண்காணிப்பு:

குறிப்பாக, கடந்த, 2011ல் பிடிபட்டது, 30 கிலோ என்றும், அதில், 15.6 கிலோ மட்டுமே கணக்கில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உள்ளூர் போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், இதுகுறித்து, தமிழக அரசு அறிவுறுத்தியதன் பேரில், தற்போது மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்க கடத்தலை தடுக்கவும், இதன் மூலம், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடற்படை, கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் வழியாக, இந்தியாவுக்குள் ஊடுருவும் கடத்தல்காரர்கள், தமிழக கடற்கரை பகுதி வழியாக, இலங்கைக்கு போதை, ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக தெரிகிறது. இலங்கை வழியாக, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அதற்கு ஈடாக, தங்க கட்டிகள், பிஸ்கட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. சமீப நாட்களில் அதிக அளவு தங்கம் பிடிபடுவதன் மூலம், நாகை கடற்கரை பகுதி, மீண்டும் கடத்தல்காரர்களின் சொர்க்கபூமியாக மாறிவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்திற்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்படாமல் தடுக்க வேண்டியது, மத்திய, மாநில போலீசாரின் கடமை.
 

No comments:

Post a Comment