Saturday,September,14, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லை என பொலிஸ் மாஅதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவிக்கின்றார்.
இதன்பொருட்டு உரிய பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் கூறினார்.
வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுதமேந்திய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் மாஅதிபர் குறிப்பிட்டார்.
சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அதுகுறித்த தரவுகளை ஆராய்ந்த பின்னர் பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதப்படும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்பொருட்டு மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவரேனும் செயற்படுவாராயின், அதற்கு எதிராக தேவையான பலத்தைப் பிரயோகிக்க பின்வாங்கப் போவதில்லை என்றும் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படுமா எனவும் பொலிஸ் மாஅதிபரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
அதற்கான தேவை இதுவரை எழவில்லை என்று பொலிஸ் மாஅதிபர் என்.கே. இளங்ககோன் பதிலளித்தார்.

No comments:
Post a Comment