Saturday, September 14, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உசுப்பேற்றும் வகையிலான பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா!

Saturday,September,14, 2013
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உசுப்பேற்றும் வகையிலான பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகாமையில் நேற்று இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னணியின் சார்பில் ஈ.பி.டி.பியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாகாணசபை குறித்து கடந்த 25 வருடங்களாக நாம் சொல்லி வந்த விடயமே இன்று சபைக்கு வந்துள்ளது. நாம் அப்போது மாகாணசபை குறித்து கூறியபோது எம்மைத் துரோகிகள் என்றும் எம்மைக் கொல்லவும் முயற்சித்தார்கள்.

ஆனால், இன்று அதை ஏற்றுக் கொண்டு அதற்காக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் எமது மக்கள் சரியானவர்களை தெரிவு செய்யும் பட்சத்தில் அவர்களது வாழ்வாதாரத்தை மென்மேலும் மேம்படுத்தும் அதேவேளை அரசியல் உள்ளிட்ட அனைத்துரிமைகளையும் நிச்சயம் வென்றெடுக்க முடியும்.

மாகாணசபை என்பது எமது மக்களுக்கான சர்வரோக நிவாரணி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அத்துடன் எமது மக்களுடைய எதிர்காலத்திற்காக என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவற்றை இனம்கண்டு அவற்றுக்கேற்ப தீர்வுகளை காண்பதிலும் நிச்சயமாக நாம் நிறைவேற்றுவோம்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பிரசார கூட்டங்களில் மக்களை உசுப்பேற்றும் வகையிலும், நடைமுறைக்குசாத்தியமில்லாத வகையிலும் பொய்யான பரப்புரைகளை பரப்பி வருகின்றனர்.

இது விடயத்தில் எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டுமென்றும் சரியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். 

No comments:

Post a Comment