Friday, September 6, 2013

இலங்கை அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமாக மாற்றமடையலாம் என நவனீதம்பிள்ளை தெரிவித்த எதிர்வுகூறல் அடிப்படையற்ற ஒன்றாகும்: வாசுதேவ நாணயக்கார!

Friday, September 06, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கம் சர்வாதிகார அரசாங்கமாக மாற்றமடையலாம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்த எதிர்வுகூறல்  அடிப்படையற்ற ஒன்றாகும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில் அவசரகால சட்டத்தை நீக்கி, வட மாகாணம் உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதனைக் கவனத்திற்கொள்ளாது அவர் இந்த கருத்தினை கூறியுள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், யுத்த  காலப்பகுதியில் இடம்பெற்ற சில கொலைகள் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையிலும் அதற்கான செயற்பாடுகளை அவநம்பிக்கை கொள்வதாக நவனீதம்பிள்ளை வெளியிட்ட கருத்து அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
பக்கச் சார்பான முன்கூட்டியே எடுக்கப்பட்ட தீர்மானத்தை பிரதிபலிப்பதாக அது காணப்படுவதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
கடந்த சுமார் ஒரு வருட காலத்தில், நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள் முன்னேற்றமடைந்து வருகின்ற நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான எதிர்வுகூறல்களை தெரிவிப்பது, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கையை ஊக்குவிப்பதற்கான தீர்மானத்திற்கு முரணானது என்றும் அமைச்சர் நினைவு படுத்தியுள்ளார்.
 
தீர்வு காணப்படாத கொலைக் குற்றங்கள், காணாமல்போனமை மற்றும் வடபகுதியில் அநாவசிய இராணுவ நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தபோதிலும், இலங்கையின் மனித உரிமை தொடர்பிலான பதிவுகள் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருவதை கவனத்திற்கொள்ளாது நவனீதம்பிள்ளை தெரிவித்த இந்த கருத்து, அவரின் கௌரவத்திற்கு இழுக்காக அமைந்துள்ளது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காகர மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment