Friday, September 6, 2013

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 376 முறைபாடுகள் - கெஃபே

Friday, September 06, 2013
இலங்கை::மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் மற்றும் சம்பவங்கள் குறித்த முறைபாடுகள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 376 முறைபாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக கெஃபே அமைப்பு தெரிவிக்கின்றது.
 
மத்திய மாகாணத்திலேயே கூடுதல் முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த நிலைமைகள் தொடர்பில் ஒருவார காலமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
 
தேர்தல் வன்முறைகள் படிப்படியாக அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி வருவதுடன், ஒரே அரசியல் கட்சியிலுள்ள குழுக்களிடையே மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களில் காணப்படுவதாகவும் கெஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
 
குருநாகல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான முறைபாடுகள் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் இதுவரை சுமார் 100 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிடுகின்றார்.
 
அத்துடன் மாகாண ரீதியாக அவதானிக்கும்போது மத்திய மாகாணத்தில் கூடுதலான சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 54 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 296 முறைபாடுகள் தமக்கு பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு கூறுகின்றது.
ஒருசில பாடசாலைகளிலும் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார்.
 
குருநாகல் மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே கூடுதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை நேரங்களில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்தும் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
எவ்வாறாயினும், அரச வளங்கள், அரச அதிகாரம் உட்பட, அண்மையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறித்தும் பதிவாகியிருப்பதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
இதுதொடர்பான முறைபாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment