Friday, September 6, 2013

பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க, போலீஸாருக்கு அதிநவீன ஆயுதங்களையும், கருவிகளையும், தமிழக அரசு வழங்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்!

Friday, September 06, 2013
திருவாரூர்::பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடிக்க, போலீஸாருக்கு அதிநவீன ஆயுதங்களையும், கருவிகளையும், தமிழக அரசு வழங்க வேண்டும்,'' என பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் வரும், 26ம் தேதி நடக்கும் பாரதியஜனாதாவின் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, திருவாரூரில், நேற்று நடந்த இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: திருச்சியில் வரும், 26ம் நடக்கும் இளைஞரணி மாநாட்டிற்கு பின், தமிழகத்தில் மிக பெரிய அரசியல் திருப்பு முனை ஏற்படும் என்பதால், வரும் பார்லிமெண்ட் தேர்தலில் கூட்டணி குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தற்போது இருந்து வரும் சட்டம் ஒழுங்கு போதுமானதாக இல்லை. இது நாள் வரை தரைமார்க்கமாக காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டும் தான் தீவிரவாதிகள் ஊடுருவல் இருந்தது.
முதல் முறையாக பாகிஸ்தான் தீவிரவாதிகள், இலங்கையில் பயிற்சி பெற்று, தமிழகத்தில் ஊடுருவி உள்ளனர். ஊடுருவி உள்ள தீவிரவாதிகளிடம், பயங்கரமான நவீன ஆயுதங்கள் உள்ளதால், தமிழக போலீஸாரிடம் அவர்களை எதிர்ப்பதற்கு கடுகளவு கூட வல்லமை கிடையாது. இஸ்ரேல் நாட்டை போல், தமிழக போலீஸாருக்கு பயிற்சியளித்து, நவீன ஆயுதங்களையும், கருவிகளையும் வழங்கினால் மட்டுமே, தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளின் சதிசெயலை முறியடிக்க முடியும்.
கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசு, நீதிமன்றத்தில் கொடுத்துள்ள தகவல் கேவலமானது. கச்சத்தீவு, 1974ல் தானம் அளிக்கப்பட்ட போது, சில விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. 1968ம் ஆண்டு பார்லிமெண்டில் கச்சத்தீவு குறித்து உறிய ஆவணங்களுடன் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பேசியுள்ளார். எனவே, தமிழகத்துக்கு மட்டுமே கச்சத்தீவு சொந்தமானது. இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.

No comments:

Post a Comment