Friday, September 06, 2013
இலங்கை::இலங்கையின் இறையாண்மை இரண்டாக பிளவுப்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுதல், காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்குதல் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்து எவ்விதமான விமர்சனங்களும் முன்வைக்கப்படவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை புலிகளின் கொலைகள் காரணமாக முறிவடையவில்லை எனவும் இராணுவத்தின் மோதல்கள் காரணமாக முறிவடைந்ததாகவும் கூட்டமைப்பு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் நேற்று தெரிவித்தன.
அரசாங்கத்தின் சகவாழ்வு செயற்பாடுகள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நடைபெறவேண்டும் என கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் புலிகளின் போராட்டத்தை விடுதலைப் போராட்டம் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அரச தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
இறையாண்மை என்பது இலங்கைக்குரியது அல்ல எனவும் அது மக்களுக்குரியது என்றும் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் புலிகளுக்கு வெள்ளை சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தை முன்னெடுத்த ஒரே இராணுவ அமைப்பு புலிகள் அமைப்பு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment