Sunday, September 15, 2013
இலங்கை::23 வருடங்களின் பின் யாழ்தேவி ரயில் நேற்று கிளிநொச்சி நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
இன்று (15) ஆம் திகதி முதல் பயணிகளுக்கான ரயில் சேவைகள் கிளிநொச்சிவரை இடம்பெறவுள்ளன.வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வந்தன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை தனது சேவையை வழங்கி வந்த யாழ்தேவி 1990ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதியின் பின்னர் வவுனியா வரை மட்டுமே பயணித்தது...
ஓமந்தை மற்றும் கிளிநொச்சி பகுதிகளுக்கு இடையிலான ரயில் மார்க்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி வரை யாழ்தேவியின் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான அதிகாரிகள் சிலரும் ஓமந்தையில் இருந்து ரயிலில் கிளிநொச்சி வரை பயணித்ததாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்னாயக்க தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட வெளிநாட்டு அதிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
வட பகுதிக்கான மார்க்கத்தில், கொழும்பிலிருந்து ஓமந்தை வரை மாத்திரமே இதுவரை ரயில் போக்குவரத்து இடம்பெற்று வந்ததாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறினார்.
கிளிநொச்சி வரை ரயில் போக்குவரத்து விஸ்தரிக்கப்படுவதை அடுத்து, இன்று முதல் மூன்று ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
காலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலப்பகுதியில், 1900 ஆண்டளவில் வடபகுதிக்கான ரயில் மார்க்க நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கொழும்பிற்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 1956 ஆம் ஆண்டிலேயே வடக்கிற்கு யாழ்தேவி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.






No comments:
Post a Comment