Friday, September 27, 2013

காஷ்மீரில் தீவிரவாதிகள் துணிகரம் 3 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல்!

Friday, September 27, 2013
ஜம்மு::பாகிஸ்தானில் இருந்து நேற்று அதிகாலை காஷ்மீர் மாநிலத்துக்குள் ராணுவ உடையில் ஊடுருவிய 3 தற்கொலைப் படை தீவிரவாதிகள், போலீஸ் நிலையத்திலும் ராணுவ முகாமிலும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 4 போலீசார், 4 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேரை கொன்றனர். முகாமில் புகுந்து தாக்கிய தீவிரவாதிகள் அனைவரையும் ராணுவம் கொன்றது.

பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் செய்யும் முயற்சிகளை ராணுவம் முறியடித்து வருவதால், தீவிரவாத அமைப்புகள் விரக்தி அடைந்துள்ளன. தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக, இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்துக்குள் பாகிஸ்தானில் இருந்து நேற்று அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் ஊடுருவினர். இந்திய ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்திருந்த அவர்கள், ஆட்டோ ரிக்ஷாவில் வந்து கத்துவா என்ற இடத்தில் உள்ள ஹிராநகர் காவல் நிலையத்தின் மீது காலை 6.45க்கு சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகளை வீசியபடி உள்ளே சென்றனர். திடீர் தாக்குதலால் போலீசார் நிலைக்குலைந்தனர். அங்கிருந்த சிறப்பு எஸ்.ஐ மற்றும் 3 போலீசாரை தீவிரவாதிகள் கொன்றனர். காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 2 கைதிகளும் கொல்லப்பட்டனர்.

பின்னர், ஜம்மு , பதன்கோட் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த தீவிரவாதிகள், அந்த வழியாக வந்த லாரி ஒன்றை துப்பாக்கி முனையில் கடத்தி அதில் ஏறி கொண்டனர். சிறிது தூரம் அதில் சென்ற பிறகு, அதன் டிரைவரை சுட்டு காயப்படுத்தி விட்டு வேறொரு டிரக்கை வழிமறித்து ஏறி கொண்டனர். அங்கிருந்து நேராக, சம்பாவில் உள்ள ராணுவ முகாமின் எதிரே வாகனத்தை நிறுத்தியதும் முகாமை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கையெறி குண்டுகளை வீசினர். வாசலில் காவலுக்கு நின்ற 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். பின்னர், முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதற்குள் ராணுவ வீரர்களும் உஷாராகி பதிலடி கொடுத்தனர்.

கமாண்டோ வீரர்களும் அழைக்கப்பட்டனர். தீவிரவாதிகள் தப்பி ஓடி விடாதபடி ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் லெப்டினென்ட் கர்னல் பிகாரம்ஜித் சிங் உட்பட 2 பேர் பலியாகினர். 9 மணி நேரம் நடந்த கடும் சண்டைக்குப் பிறகு, 3 தீவிரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதை சீர்குலைக்கவே தீவிரவாதிகள் இந்த தாக்குலை நடத்தி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவும், காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் குற்றம்சாட்டி உள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நடத்தக் கூடாது என்று பாஜ ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தீவிரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பு

ஸ்ரீநகர்: இந்த தாக்குதலுக்கு இதுவரை அதிகம் கேள்விப்படாத ‘சொகதா பிரிகேட்’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொண்டிருந்த அதே நேரம், செய்தி நிறுவனம் ஒன்றை தொலைபேசி மூலமாக ஒருவன் தொடர்பு கொண்டான். தன்னை இந்த அமைப்பின் தகவல் தொடர்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்ட அவன், தனது பெயர் சமி அல் ஹக் என்று கூறினான்.

கத்துவா காவல் நிலையத்திலும், சம்பா ராணுவ முகாமிலும் எங்கள் அமைப்பை சேர்ந்த 3 பேர் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களில் ஒருவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. மற்ற 2 பேருடன் தொடர்ந்து பேசி, உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம். தாக்குதல் நடத்தும் 3 பேரும் உள்ளூரை சேர்ந்தவர்கள்’’ என்று கூறி விட்டு தொடர்பை அவன் துண்டித்து விட்டான்.

No comments:

Post a Comment