Monday, September 2, 2013

இலங்கையில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக தங்கம் கடத்தல்: 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை!

Monday, September 02, 2013
வேதாரண்யம்::இலங்கையில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கடத்தல் தங்கம் கொண்டுவரப்படுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் வழியாக மோட்டார் சைக்கிளில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள திருக்குவளை வட்டம் தென்கரை ஈசனூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

இந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 18 கிலோ தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதா? அல்லது தமிழகத்தின் வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கிருந்து 2 பேரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 18 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

 

No comments:

Post a Comment