Monday, September 9, 2013

கச்சத்தீவுக்கு விநாயகர் சிலை கொண்டு செல்ல முயற்சி: இந்து மக்கள் கட்சியினர் 17 பேர் கைது!

Monday, September 09, 2013
சென்னை::திண்டுக்கல்லில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் பாரதி புரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
 
மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலையை கச்சத்தீவுக்கு எடுத்து செல்லப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
இதுகுறித்து மாவட்ட தலைவர் தர்மா கூறும்போது, கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. தற்போது அது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
கச்சத்தீவில் அந்தோணியார் கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்து கடவுள்கள் எதுவும் இல்லை. எனவே அங்கு விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த வேண்டும். கச்சத்தீவை இந்தியா மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி என்று இங்கிருந்து கச்சத்தீவு செல்ல உள்ளோம் என்று தெரிவித்தார்.
 
அப்போது டி.எஸ்.பி. சுருளிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், கண்ணன், மற்றும் போலீசார் அங்கு குவிந்தனர். அவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இது அரசின் நெறிமுறைகளுக்கு மீறிய செயலாகும் என்று எடுத்துரைத்தனர். ஆனால் இந்து மக்கள் கட்சியினர் அதனை கேட்காமல் பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட்டபடி விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து வேனில் ஏற்றினர். கச்சத்தீவுக்கு விநாயகர் சிலையை கொண்டு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தர்மா, மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், நகர தலைவர் சின்னச்சாமி, ஒன்றிய தலைவர் கணேசன் மற்றும் செல்வம், திருமுருகன் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
இதனை கண்டித்து இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கோஷமிட்டு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் நகரில் இன்று பரபரப்பான சூழ்நிலை உருவானது.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment