Thursday, August 22, 2013
இலங்கை::கடந்த சில நாட்களாக ஊடகங்களில் இரு திரைப்படங்களின் வெளியீடு தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தன. இதில் ஒன்று தலைவா என்ற திரைப்படம். மற்றையது மெட்ராஸ் கஃபே எனப்படும் திரைப்படம். தலைவா பட விவகாரம் தமிழகத்தில் தீர்க்கப்பட்டதை தொடர்ந்து “வரும் வெள்ளிக்கிழமை (23-ம் தேதி) வெளியாகவுள்ள ‘மெட்ராஸ் கஃபே’ படம் ஈழத்தமிழர்களுக்கு எதிரான படம்; இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது” என்று தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் சில அமைப்புகளுக்கு படத்தை போட்டுக் காட்ட சம்மதித்திருந்தார்கள், படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும். இதனையடுத்து அந்தப்படம் வார இறுதியில் தமிழ் அமைப்புகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் சில தமிழ் அமைப்புகளுடன், டைரக்டர்கள் வ. கௌதமன், ஆர்.கே செல்வமணி ஆகியோரும் படத்தை பார்த்தனர்.
படத்தைப் பார்த்தவர்கள், “படத்தில் கூறப்பட்ட விஷயங்கள், மற்றும் சம்பவங்கள் பச்சைப் பொய். படத்தை தடைசெய்தே தீரவேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். ‘மெட்ராஸ் கஃபே’ படத்தில், ஈழ விடுதலை இயக்கத்துக்குள் ஊடுருவும் ‘ரா’ உளவுத்துறை ஏஜென்ட்டாக நடிக்கிறார், ஜான் ஏபிரஹாம். கதையின்படி, இவர் இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் அங்கு செல்கிறார். தம்மை யார் என்று காட்டிக் கொள்ளாமல், ஈழ விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்போது அங்கே யுத்த முனையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் (நர்கீஸ் ஃபக்ஹ்ரி) ஒருவரை சந்திக்கிறார். அவர் மூலமாக ஈழ விடுதலை யுத்தத்தின் பல பின்னணிகளை தெரிந்து கொள்கிறார் என்று போகிறது கதை. பெண் செய்தியாளரின் கேரக்டர், புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு பேட்டிகண்ட இந்திய பெண் செய்தியாளர் அனிதா பிரதாப்பை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்டதாம்.
டைரக்டர் ஆர்.கே செல்வமணி, “மெட்ராஸ் கஃபே திரைப்படம் ராஜபக்ஷே பணம் கொடுத்து, சோனியா காந்தி டைரக்ட் செய்து, இந்திய ரா உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது என்று கூறியுள்ளார். ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னணியில் புலிகள் உள்ளனர் என்று படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திராகாந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே செல்வமணி. இந்திய அமைதிப்படை இலங்கையில் சென்று நடத்திய படுகொலை பற்றி படத்தில் ஏன் காட்டவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், “அதனால் இப்படத்தை தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் திரையிட அனுமதிக்கக் கூடாது. தமிழ் இனத்தை கொச்சைப் படுத்துவதாக எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இப்படத்தைப் பார்த்த இரா. இளமுருகன், “ஒரு காட்சியில் வைகோ அய்யா அவர்கள் மீது அவதூறை வாரி இறைத்து இருக்கிறார்கள். காசி ஆனந்தனும் நேரடியாக கொச்சைப்படுத்தபட்டிருக்கிறார்” என்கிறார்.
இவர்களின் இந்தக்கருத்துக்கள் ஒன்றும் புரியவை அல்ல. ஈழத்தை விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள் அந்த இடத்தில் இப்படியான ஆவேசங்களை காட்டியே ஆக வேண்டும். இல்லையெனில் ஈழப்பிழைப்பு நாறிவிடும் என்பது அவர்கள் நன்கறித்த உண்மை. இது இப்படி இருக்க அங்கு திரைப்படத்தினை பார்த்த ஒருவர் கூறிய அண்டப்புழுகு தொடர்பாக நாம் குறித்து நபர்களிடத்திலும் புழுகுமூண்டை முண்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஊடகங்களுக்கும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். இதோ அந்த ஈ(ன)ழப்பிறவி கூறிய கருத்து:-
ஜி.கணேஷ் என்பவர் “சற்று முன்பு Madras cafe படம் பார்த்து முடித்தோம் நிறை எழுத இருக்கிறது. படத்தில் நாயகனின் அப்பாவி மனைவியை புலிகள் வீடு புகுந்து சுட்டு கொல்வது போல உள்ளது. புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது. அதுவும் விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையவே கிடையாது என்று கூறியுள்ளார். இவ்வாறாக தமிழகத்தில் உள்ள பல தலைவர்கள் இப் படத்துக்கு தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். இதுவரை அதிமுக கட்சியினர் மட்டுமே வாயைத் திறக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இதுதான் அவரின் கண்மூடித்தனமாக கருத்து. இவர் உண்மையில் இக்கருத்தை கூறியிருப்பின் இவரிடம் சில கேள்விகள். புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது என்று வாய் கூசாமல் பொய் கூறும் நீங்கள் விடுதலைப்புலிகளை பற்றி நன்கு அறிந்தவர்தானா..?
- அல்லது புலிகள் பற்றி தெரிந்தும் குறித்த படத்தை வெளியிடுவதால் புலிகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்ற பயத்தில் புழுகித்தள்ளுகிறீர்களா..?
- ஆண் பெண் என பார்க்காமல் சிறுவர்களை தமது கல்வியை தொடர இடமளிக்காமல் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர நிர்ப்பந்தித்தவர்கள் யார்..?
- அப்பாவி பொதுமக்கள் பயணம் செய்தும் பேரூந்துகளில் குண்டு வைத்து இரத்த வெள்ளம் ஓட வைத்தவர்கள் யார்..??
- சகோதர இனத்தவர்களில் பள்ளிவாசல்கள் மீது குண்டு போட்டு கொன்றழித்தவர்கள் யார்….??
- கல்விமான்கள் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் என சுட்டுவீழ்த்தியவர்கள் யார்..?
இப்படி புலிகளின் அடாவடிகளை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாமே… இப்படிப்பட்டவர்களுக்காக நீங்கள் வாதாடுவதும், வக்காளத்து வாங்குவதும், உங்கள் தனிப்பட்ட விடயம். ஆனால்…. தயவு செய்து கொடியவர்களுக்கு உத்தமர் பட்டம் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்காதீர்கள். வெறுமனே ஊத்தை மண்ணுக்கு விலையை ஏற்றாதீர்கள். ஈழத்தை விற்று பிழைப்பு நடத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள். திரைப்படத்தை தடைசெய்வதற்காக நீங்கள் சுத்தப்பொய் சொல்வதைப்பார்த்தால் படத்தில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை என எண்ணத்தோன்றுகிறது எமக்கு.
LM.



No comments:
Post a Comment