Thursday, August 22, 2013

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ராமேசுவரம் கடல் பகுதியில் 6 கப்பல்கள் தீவிர ரோந்து!

Thursday, August 22, 2013
ராமேசுவரம்::தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ராமேசுவரம் கடல் பகுதியில் 6 கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் ராமேசுவரத்தில் விடிய, விடிய போலீசார் வாகன சோதனையும் நடத்தினர்.

இலங்கை, ராமேசுவரம் கடல் பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 8 பேர் தமிழகத்திற்குள் ஊடுருவி, மதுரை, மயிலாதுறை உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை கடிதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு பிரிவுகள், ராமேசுவரத்தில் உள்ள அனைத்து உளவுப் பிரிவுகள், மண்டபத்தில் உள்ள கடலோர போலீஸ், இந்திய கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 "ஹோவர் கிராப்ட்'' கப்பல்கள் 2 சிறிய கப்பல்கள், சென்னையில் இருந்து கடலோர காவல் படையின் பெரிய கப்பல் ஒன்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்று என மொத்தம் 6 கப்பல்கள் ராமேசுவரம் தனுஷ்கோடி உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் உச்சிப்புளியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும், விமானமும் ராமேசுவரத்தில் இந்திய கடல் மீது பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. ராமேசுவரத்தில் கோவிலை சுற்றி ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

நேற்று மாலை முதல் இரவு வரை போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு விடுதியாக சென்று சோதனை நடத்தப்பட்டது. விடுதியில் யார்-யார் தங்கி உள்ளனர். அவர்கள் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் உத்தரவின்பேரில் ராமேசுவரம் டி.எஸ்.பி. மோகன்ராஜ் தலைமையில் ராமேசுவரத்தில் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. ராமேசுவரம் வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

கடலோர போலீசாரும் பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்களை சந்தித்து கூட்டம் போட்டு மீனவர்கள் வேடத்தில் மீன்பிடி படகுகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் உடனடியாக கடலோர போலீசாரின் இலவச தொலைபேசி எண் 1093-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் கீழ வாசல், மேலவாசல் பகுதியில் மெட்டல்டிடெக்டர் கருவி அமைத்து பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு காமிராவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment