Thursday, August 22, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டு பிரசாரம் செய்துவருகின்றது. ஆளும் கட்சியினரை ஆத்திரமூட்டும் வகையில் கூட்டமைப்பு இவ்வாறு பிரசாரங்களைசெய்தபோதிலும் நாங்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்கின்றோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை போன்றோர் இலங்கை வரவுள்ள நிலையில் இவ்வாறு நாட்டில் அமைதியில்லை என்று காட்டுவதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது ஆளும் கட்சியின் அலுவலகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சுயாதீன கண்காணிப்பாளர்கள் என்ற பெயரில் சிலர் வெளி நாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கூறினார்.
வடக்குத் தேர்தல் நிலைமைகள் மற்றும் வன்முறைகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற விடயங்கள் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆளும் கட்சி வடக்கில் வன்முறைகளை மேற்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இணைய தளங்களில் இவ்வாறு செய்திகளை வெளியிட்டுவருகின்றன எனவும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற பிரசாரங்களை மேற்கொண்டு ஆளும் கட்சியினரை ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் கூட்டமைப்பினர் திட்டமிட்ட ரீதியில் ஈடுபட்டுவருகின்றனர் என்று பசில் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.

No comments:
Post a Comment