Friday, August 23, 2013

மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம்!

Friday, August 23, 2013
இலங்கை::மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இவரின் பாதுகாப்பு மற்றும் வடக்கு விஜயம் உள்ளிட்ட சந்திப்புக்கள் தொடர்பில் ஒழுங்குகள் மேற்கொள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட குழு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொது மக்கள் என பல தரப்பினர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொள்ள உள்ளதுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற வன்னிப் பகுதிகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான இரண்டு தீர்மானங்களுக்கு அமைவாக அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கண்காணிப்பதே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரும் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை 31 ஆம் திகதி வரையில் இங்கு தங்கியிருப்பார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசின் அமைச்சர்கள் பலரையும் சந்திப்பார். அத்துடன் எதிர்க்கட்சிகளையும் சந்திப்பார். மேலும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நவநீதம்பிள்ளை சந்திப்பார். இச்சந்திப்புக்கள் தொடர்பில் ஒழுங்குகள் செய்யவே விசேட குழு இன்று இலங்கை வருகின்றது.
 
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தின்போது திருகோணமலைக்கும்  செல்லவுள்ளார்.

ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.

அவரது திருகோணமலை விஜயத்தின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து சமகால நிலைமைகளைப் பற்றிக் கேட்டறிந்து கொள்வார் என்று தெரிய வருகின்றது.

மட்டக்களப்பிலிருந்தும் ஒரு சாரார் திருகோணமலைக்குச் சென்று நவநீதம்பிள்ளையைச் சந்தித்து சமகால நிலைமையிலுள்ள பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறவுள்ளனர் என்றும் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment