Monday, August 19, 2013

கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை: இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார்கள்: ஜி.எல்.பீரிஸ்!

Monday, August 19, 2013
இலங்கை::இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றிற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படமாட்டார்கள் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இரண்டு மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மீனவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்ததாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டிருந்தாகவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எவ்வாறாயினும் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாக்கு நீரிணையை அண்மித்த இலங்கை கடற்பரப்பிற்குள் 400 ற்கும் 500 ற்கும் இடைப்பட்ட படகுகளில் ஒரே தடவையில் பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்..
 
கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை - ஜி.எல். பீரிஸ்!
 
கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ சார்பில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்பதற்காக பீரிஸ் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார்.  அவர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலையிலும் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை பிற்பகலிலும் சந்தித்துப் பேசவுள்ளார்.
 
இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பீரிஸ், பொதுநலவாய  நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதன் பிரதமர் என்ற முறையில் கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங்கேற்பதை முக்கியமானதாகக் கருதுகிறோம்.
 
கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்னை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம். கச்சத்தீவை இலங்கைவசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திதான் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, சர்வதேச எல்லைக்குட்ட கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
மேலும், ஒப்பந்தத்தில் இலங்கை மீனவர்களுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது. எனவே, கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
 
இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அளவுக்குத் தமிழக மீனவர்கள் வந்து மீன்பிடிக்கின்றனர். ஏற்கெனவே, இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது கடற்புலிகளால் (விடுதலைப்புலிகள் அமைப்பின் கடல் பிரிவு) இலங்கைத் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். போருக்குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகுதிக்குத் தமிழக மீனவர்கள் வருவதால், தங்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எங்கள் நாட்டு மீனவர்கள் கருதுகின்றனர்.
 
மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷயத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண்டும் என பீரிஸ் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment