Tuesday, August 20, 2013

ஆயிரக்கணக்கானோர் வருகை சிரியா அகதிகள் ஈராக்கில் தஞ்சம்!

Tuesday, August 20, 2013
பாக்தாத் : சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள், எல்லை தாண்டி ஈராக்கில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சிரியாவில் குர்திஷ் இன மக்களுக்கும், அரசுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு படையினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் சிரியாவின் எல்லைப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குர்திஷ் இன மக்கள், புகலிடம் தேடி ஈராக்கின் குர்திஷ்தான் பகுதிக்கு அகதிகளாக வருகின்றனர். சிரியாவில் கடந்த 2011ல் இருந்து அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 2 லட்சம் பேர் ஈராக்குக்கு அகதிகளாக வந்து பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மோதல் மீண்டும் பெரிய அளவில் வெடித்ததை தொடர்ந்து, சுமார் 10,000 பேர் ஈராக்குக்கு அகதிகளாக வந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமையும் 7,000 பேர் வந்தது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் மோதல் நடப்பது வழக்கமாக உள்ள நிலையில், இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென அங்கிருந்து அதிகம் பேர் ஈராக்குக்கு அகதிகளாக வந்து கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சிரியாவில் அரசுக்கு எதிரான தீவிரவாதிகள் மீது ரசாயன ஆயுதங்களை அரசு தரப்பு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. சபையின் ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் டமாஸ்கஸ் வந்துள்ளனர். இவர்கள் சிரியாவின் கான் அல் அஸ்ஸல் உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment