Friday, August 23, 2013

புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை சர்வதேச ரீதியான சவால்களை எதிர்நோக்கி வருகின்றது: ரொஹான் குணரட்ன!

Friday, August 23, 2013
இலங்கை::புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை சர்வதேச ரீதியான சவால்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு குறித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அரசாங்கம் உள்நாட்டு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இராணுவ மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் வலுவாக காணப்பட்ட போதிலும் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகள் பலம் பொருந்தியதாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்மலானை கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
புலிகளை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புலிகள் மீளவும் ஒருங்கிணைய முடியாத வகையில் தி;ட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், சர்வதேச ரீதியாக எழும் சவால்களுக்கு சரியான முறையில் பதிலளிக்கக் கூடிய ஆற்றல் இன்னமும் வளர்த்துக் கொள்ளப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக எமது ராஜதந்திரிகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலிகளின் சர்வதேச வலையமைப்பு பிழையான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இந்த பிழையான பிரச்சாரங்களை தடுத்து நிறுத்தக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என பேராசிரியர் ரொஹான் குணரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment