Friday, August 23, 2013

கன்னியாகுமரி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலா?: சோதனையில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை!

Friday, August 23, 2013
நாகர்கோவில்::பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் கடல் வழியாக ஊடுருவ செய்து நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குறிப்பாக தென்மாநிலங்களில் அதுவும் தமிழ்நாட்டில் மதுரை, மயிலாடுதுறை நகரங்களை தாக்க திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக தமிழ்நாட்டுக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மாநில அரசை உஷார்படுத்தியது. அதன்படி கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர காவல்படையினர் அதிநவீன ரோந்து படகுகளில் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் இருந்து மாவட்டத்தின் நகர்பகுதிகளுக்கு வரும் அனைத்து சாலைகளும் சீலிடப்பட்டன. கூடுதல் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்தவர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணைக்கு பின்னரே அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில், தூத்துக்குடி கடலோர காவல்படை கமாண்டர் அனந்தகுமார் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி கடலோர காவல் படையினரை நள்ளிரவு நேரத்தில் உஷாராக இருக்கும் படியும், இரவில் யாராவது கடற்கரைகளில் சந்தேகப்படும்படி படகுகளில் வந்து இறங்குகிறார்களா? என்பதை கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான 54 கடற்கரை கிராமங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. கடலோர காவல்படை போலீசாருடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து ரோந்து சுற்றி வந்தனர்.

கன்னியாகுமரி, சின்ன முட்டம், மகாதானபுரம், மாதவபுரம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம் பகுதிகளில் ஏற்கனவே உள்ள சோதனை சாவடிகளுடன் கூடுதலாக உட்புற சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அருகே புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் நள்ளிரவு 1 மணிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர். காருக்குள் 6 வாலிபர்கள் இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் பெங்களூர் மற்றும் தர்மபுரியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்ததாகவும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பார்க்க விரும்பியதால் இங்கு வந்ததாகவும் தெரிவித்தனர். இது போலீசாருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

நள்ளிரவு 1 மணி அளவில் மீன்பிடி துறைமுகத்தை பார்க்க வேண்டிய அவசியம் என்னப என்று அவர்களிடம் போலீசார் கேட்ட போது அவர்களின் பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனால் போலீசார் அவர்கள் 6 பேரையும் சந்தேகத்தின் பேரில் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

பிடிபட்ட 6 பேரும் பெங்களூர் மற்றும் தர்மபுரியை சேர்ந்தவர்கள் என்று கூறியதால் இவர்களுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர் குமரி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இவர்களுக்கு ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்பு உள்ளதா?

என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புதுக்கடை போலீஸ் நிலையம் சென்று 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 6 பேரின் அங்க அடையாளங்கள் மற்றும் புகைப்படங்கள் சேலம், தர்மபுரி, பெங்களூர் போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப் பட்டு அவர்களிடம் விவரம் கேட்க குமரி போலீசார் முடிவு செய்துள்ளனர். அங்கிருந்து கிடைக்கும் தகவல்களுக்கு பிறகே இவர்கள் யார்? என்ற விவரமும் எதற்காக நள்ளிரவில் குமரி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்தனர்? என்பதும் தெரியவரும்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment