Sunday, August 25, 2013

ஞானதேசிகன் மீது கருணாநிதி பாய்ச்சல் ஏன்?.

Sunday, August 25, 2013
சென்னை::லோக்சபா தேர்தலில், தி.மு.க., அல்லாமல் அ.தி.மு.க., அல்லது தே.மு.தி. க.,வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செயல்படுகிறார் என, தி.மு.க., தரப்பில் கருதுவதால், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, ஞானதேசிகன் தெரிவித்த கருத்துக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடும் கண்டனத்தை தெரிவித்தார். "இலங்கையை எதிரி நாடாக கருதினால், தமிழர் பிரச்னை குறித்து, யாரிடம் பேசுவது என, தமிழக அரசியல் கட்சிகள் கூறவேண்டும்' என, ஞானதேசிகன் கேட்டு இருந்தார். இதற்கு, "அவர் விதண்டாவாதம் செய்கிறார்; இலங்கையை நட்பு நாடாக கருத வேண்டும் என, ஞானோபதேசம் செய்கிறார்; வேதாந்தம் பேசுகிறார்' என, கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

கருணாநிதியின் கண்டன அறிக்கை குறித்து ஞானதேசிகன் கூறியதாவது: காமன்வெல்த் மாநாட்டிற்கு செல்வதால் லாபமா, செல்லாமல் இருப்பது லாபமா என்பது குறித்து நாம் விவாதிக்க வேண்டும். இந்த கருத்தை தான் நான் தெரிவித்தேன். இதில் எந்தவித தவறும் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு எதிராக, ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நான் பேசவில்லை. ராஜபக்ஷே அரசு, விரோதி அரசாக இருக்கலாம். இலங்கை நாடு எப்படி, விரோதி நாடாக இருக்க முடியும். இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் உரிமை கிடைப்பதிலும், மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதிலும் எனக்கு வேறுப்பட்ட நிலைப்பாடு கிடையாது. அதனால் தான், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு யாருடன் பேசுவது என்ற கேள்வியை தான் கேட்டேன். இதற்கு கருணாநிதி ஏன், என் மீது கோபப்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு, ஞானதேசிகன் கூறினார்.

இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,விற்கும் இடையே ஒரு இடைவெளியை ஞானதேசிகன் உருவாக்குகிறார் என, தி.மு.க., கருதுகிறது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் அல்லது தே.மு.தி.க., - கொங்கு கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற கருத்தை, ராகுலிடம், ஞானதேசிகன் தெரிவித்துள்ளதாக, தி.மு.க., கருதுகிறது. மேலும், ஞானதேசிகன்,
தமிழக காங்கிரஸ் தலைவரான பின், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் அருகில், வழக்கறிஞர் ஆபீசுக்கு ஞானதேசிகன் அடிக்கடி சென்றாலும், அருகில் உள்ள கருணாநிதியை, தேடிச் சென்று சந்தித்து பேசுவதில்லை என்ற அதிருப்தியும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, கருணாநிதி அளிக்கும் பதிலுக்கு, "ஜால்ரா' தட்டாமல் எதிர் கேள்வி கேட்பதும் தி.மு.க.,வுக்கு பிடிக்கவில்லை. அதன் பின்னணியாக தான், ஞானதேசிகன் மீது, கருணாநிதி அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment