Thursday, August 15, 2013

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும்!

Thursday, August 15, 2013
இலங்கை::இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதுடன் நாட்டின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஆறு நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளன.
 
தன்சானியா, பொட்ஸ்வானா, சுவாசிலாந்து, ருவண்டா ஆகிய ஆபிரிக்க நாடுகளும் மொரீஷியஸ், பெனின் ஆகிய நாடுகளுமே ஜனாதிபதியிடம் இந்த உறுதிமொழியை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப் பேச்சாளர் அநுராதா ஹேரத் தெரிவித்தார்.
 
மேற்படி நாடுகளின் இலங்கைக்கான புதிய 05 உயர்ஸ்தானிகர்களும் ஒரு தூதுவரும் தமது நியமனக் கடிதங்களை சமர்ப்பிக்கும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்துச் சந்தித்தனர்.
 
இந்நிகழ்வின் போதே தாம் பொதுநலவாய உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அதில் கலந்துகொள்வதன் மூலம் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாகவும் கூறியிருந்தனர்.
 
இலங்கைக்கான பொட்ஸ்வானாவின் புதிய உயர்ஸ்தானிகரான லெசிகோ எத்தெல் மொட்சுமி, நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டில் தமது நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்வது உறுதியெனக் கூறியிருந்தார்.
 
மேலும் சமாதானமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு பொட்ஸ்வானா அரசாங்கம் உறுதுணையாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.பொதுநலவாய அமைப்பில் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ள எமக்கு கொழும்பில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு இரண்டாவது தடவையாக கலந்துகொள்வதற்கான வாய்ப்பினை தருகிறது.
 
எனவே இம்மாநாட்டினை எதிர்பார்த்திருப்பதாக ருவாண்டாவிற்கான புதிய உயர்ஸ்தானிகர் ஈர்னஸ்ட் ருவாமியூகோ கூறினார்.இலங்கைக்கான பெனின் தூதுவரான என்ரீ சன்ரா எதிர்வரும் ‘ச்சோகம்’ விசிலிமிணி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி சமாதானத்தின் தலைவரெனவும் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியை பாராட்டியிருந்தார்.
 
2015 இல் பொதுநலவாய உச்சி மாநாடு மொரீஷியஸில் நடைபெறவிருப்பதனால் இலங்கை அரசாங்கம் இவ்வருடம் உச்சிமாநாட்டை முன்னெடுக்கும் விதத்தை நாமும் பின்பற்றவுள்ளோமென இலங்கைக்கான புதிய மொரீஷியஸ் தூதுவர் ஆர்யா குமார் ஜகீஸர் ஜானதிபதியவர்களிடம் உறுதியளித்தார்.
 
பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கவுள்ள இலங்கைக்கு மொரீஷியஸ் அரசாங்கம் முழுமையான ஆதரவினை வழங்கும் அதேவேளை மொரீஷியஸில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கு இலங்கை ஆதரவினை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
 
மேலும் பொதுநலவாய உச்சி மாநாட்டினை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் அனைத்து ஏற்பாடுகளுக்கும் தனது பாராட்டுக்களையும் இதன்போது அவர் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment