Wednesday, August 28, 2013

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.30 லட்சம் ஹவாலா பணமா? : போலீசார் தீவிர விசாரணை!

Wednesday, August 28, 2013
சென்னை::சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு சோதனையின்போது கட்டுகட்டாக ஒருவரிடம் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்த போலீசார் அந்த பணம் ஹவாலா பணமா என  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 11 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்கமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைந்த ஒருவர் கொண்டு வந்த பையை சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அதில் கட்டுகாட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் உடனே பாதுகாப்பு படையினர், சென்ட்ரல் ரயில்வே இன்ஸ்பெக்டர் அழகர்சாமியிடம் அவரை ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரையை சேர்ந்த சையத் முகமது சபீர்(47). என்பது தெரிந்தது. போலீசாரிடம் அவர் கூறியது:

சென்னை மண்ணடியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு சரியாக வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முயன்றபோது சலீம் என்பவர் Ôநீ¢ எதற்கு ஊருக்கு செல்கிறாய், நான் உனக்கு ஒரு வேலை தருகிறேன். ஒரு நாளைக்கு உனக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்Õ என்று தெரிவித்தார். தான் கொடுக்கும் பணத்தை கேரளாவில் உள்ள பாலக்காடு ரயில் நிலையத்தில் உள்ள ஒருவரிடம் கொடுக்க வேண்டும் என்றும் சலீம் கூறினார்.

அதற்கு அந்த நபர் யார் என்று கேட்டேன். ‘அவரே உன்னை தொடர்பு கொள்வார்’ என்று சலீம் கூறினார். அதன்படி நேற்று என்னிடம் சலீம் கொடுத்த பணத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அவர் விசாரணையில் தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல சையத் முகமது சபீர் திட்டமிட்டிருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் வெளிநாட்டில் இருந்து வரிகட்டாமல் கடத்தி வந்த ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் இன்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சையத் முகமது சபீரை ஒப்படைக்க உள்ளனர். கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment