Wednesday, July 17, 2013

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை விபரங்களை பேரறிவாளனுக்கு வழங்க தகவல் கமிஷன் உத்தரவு!

Wednesday, July 17, 2013
புதுடெல்லி::முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 21-5-1991 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் ஆகிய 2 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு, அவரை கொல்வதற்காக தீட்டப்பட்ட சதி திட்டம் உள்ளிட்ட பல அம்சங்களை இவ்விரு கமிஷன்களும் விசாரித்தன.

இந்த படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டும் இந்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இவர்களின் கருணை மனுக்களை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 2011ம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், 'ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் நடத்திய விசாரணையின்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணை விபரங்கள், அரசு எடுத்த நடவடிக்கை குறிப்புகள் ஆகியவற்றை வழங்க வேண்டும்' என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்தார்.

இந்த மனுவினை தகவல் அறியும் உரிமை கமிஷனர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.

பேரறிவாளனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் அடிப்படையிலான இந்த மனுவிற்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சகம், இதுதொடர்பான அறிக்கைகள் தங்களிடம் இல்லை எனக்கூறி தகவல் அளிக்க மறுத்துவிட்டது.

ஜெயின் கமிஷன் விசாரணையின் சில அறிக்கைகள் மட்டும் தங்களிடம் இருப்பதாகவும், வர்மா கமிஷன் அறிக்கை தொடர்பான எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் கைவிரித்து விட்டது.

இந்நிலையில், மேற்படி தகவல்களை தரும்படி கேட்டு மத்திய தகவல் கமிஷனர் சுஷ்மா சிங்கிடம் பேரறிவாளன் மீண்டும் மனு செய்தார்.

இதனையடுத்து, தங்களிடம் இதுதொடர்பாக 918 கோப்புகள் இருப்பதாக தேசிய ஆவண காப்பகம் கூறியது.

இந்நிலையில், இந்த தகவல்களை பேரறிவாளனுக்கு வழங்கலாமா? என்பது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு ஆணையத்தின் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு தொடர்பான விவகாரங்களை கையாளும் துறைக்கு தகவல் கமிஷனர் சுஷ்மா சிங் உத்தரவிட்டுள்ளார்.

கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தனது வழக்கு தொடர்பான விசாரணையைப் பற்றி அறிந்துக்கொள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment