Thursday, June 6, 2013

தமிழக மீனவர்கள் இன்றும் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

Thursday, June 06, 2013
ராமேசுவரம்::ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 1400 விசைப்படகுகளும், 2500 நாட்டு படகுகளும் உள்ளன. சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். நேற்று காலை 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

இந்திய கடல் எல்லையை தாண்டி வந்து மீன்படித்ததாக கூறி 5 படகுகளையும் அதில் இருந்த மீனவர்கள் அந்தோணி, ஜோசப், அல்போன்ஸ் உள்பட 24 மீனவர்களையும் சிறைபிடித்து கடத்தி சென்றனர். தமிழக மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக் கக்கூடாது என்று விரட்டியடித்தனர். சேதுராமன் என்பவர் படகையும் விரட்டினர். இதனால் அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் உயிர் பிழைத்தால்போதும் என்று படகை வேகமாக ஓட்டி வந்தனர். அப்போது காற்றும் வேகமாக வீசியது. இதனால் படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த 4 மீனவர்கள் கடலில் நீந்தி உயிர் பிழைத்தனர்.

ஆனால் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி (வயது 55) மூச்சுத் திணறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் ராமேசுவரம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. படகு கவிழ்ந்து மீனவர் இறந்த சம்பவம் ராமேசுவரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவு மேலும் 25 மீனவர்களை சிறைபிடித்துள்ளது. கச்சத்தீவு அருகே நேற்று நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 படகுகளுடன் 25 பேரை சிறை பிடித்தனர். நேற்று மாலையில் சிறை பிடிக்கப்பட்ட 24 மீனவர்களுடன் இவர்களையும் சேர்த்து மொத்தம் 49 மீனவர்களையும் இலங்கை ஊர்க்காவல் துறை காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்தனர். இன்று 49 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவில்லை.

கடந்த வாரம் கச்சத்தீவு பகுதியில் இலங்கை அருகே போர்கப்பல்களை நிறுத்தி இருந்ததால் ராமேசுவரம் மீனவர்கள் அச்சம் அடைந்து கதி கலங்கினர். அதன்பிறகு போர் கப்பல்களை இலங்கை அரசு அகற்றியது. இந்த நிலையில் மீண்டும் கச்சத்தீவு அருகே இலங்கை அரசு போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது. பெரிய போர் கப்பல் ஒன்றும் ரோந்து கப்பல்கள் 10-ம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் அச்சம் அடைந்து பீதியில் உள்ளனர்.

கச்சத்தீவு அருகே இலங்கை அரசு நிறுத்தியுள்ள போர் கப்பல்களை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை மத்திய அரசு தடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment