Tuesday, June 4, 2013

கருணாநிதியும் ஸ்டாலினும் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்: முதல்வர் ஜெயலலிதா!

Tuesday, June 04, 2013
ஸ்ரீரங்கம், ஜூன்.4 - கழுதையின் சமாதியை மகானின் சமாதி என்று ஏமாற்றிய தந்தையும், மகனும் போன்றவர்கள் கருணாநிதியும், ஸ்டானும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:-
 
சிற்பக் கலையின் சிகரமாகவும், வழிபாட்டுத் தலங்களின் இருப்பிடமாகவும், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் பிறப்பிடமாகவும் திகழ்கின்ற திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் இந்த இனிய அரசு விழாவிலே பங்கேற்று, என் அன்பிற்குரிய மக்களாகிய உங்களை காணவும், உங்களுடன் சில கருத்துகளைப் பரிமாறவும், 41 கோடியே 98 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து, 
 
1,752 கோடியே 69 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி; 59 கோடியே 76 லட்சத்து 93 ஆயிரத்து 140 ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 2 பயனாளிகளுக்கு வழங்கவும் இன்று வாய்ப்பு கிடைத்தது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அதாவது 1,854 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரத்து 140 ரூபாய் மதிப்பிலான பணிகளும், நலத் திட்ட உதவிகளும் இன்று செயல்படுத்தப்படுகின்றன, வழங்கப்படுகின்றன. 
 
தமிழகத்தில் இல்லாமை இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதன் அடிப்படையிலும்; மனித வளம் சிறப்புற மேம்பாடு அடைய வேண்டும் என்ற அடிப்படையிலும்; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலும்; தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்துப் பிரிவினரும் உரிய பங்கினை பெற வேண்டும் என்ற அடிப்படையிலும்; பல்வேறு திட்டங்கள் எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  விவசாயம்  மற்றும் அதனைச் சார்ந்த துறைகள்;  தொழில் துறை; சேவை  துறை  என அனைத்திலும்   தமிழகம் முதல் நிலை அடைவதற்கான புதிய திட்டங்களையும் எனது அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள், மாணவ-மாணவியர், தாய்மார்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், இளைஞர்கள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள், விவசாயிகள், முதியோர் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வண்ணம் பல்வேறு  புதிய திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன். 
 
இது மட்டுமன்றி, பொது மக்களின் வேண்டுகோள், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை
கவனமுடன் பரிசீலித்து சட்டமன்றம் நடைபெறும் போது, சட்டமன்ற விதி 110-ன் கீழ் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன்.  இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர்
மு.கருணாநிதி, இவை எல்லாம் வெறும் அறிவிப்புகள் என்று குதர்க்கமாக தெரிவித்தார். சட்டமன்றத்திலேயே இதைப் பற்றி நான் விளக்கம் அளித்து, 
2011, 2012 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் என்னால் செய்யப்பட்ட 136 அறிவிப்புகளில் 127 அறிவிப்புகள் மீது, முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனக் கூறி ஒரு சில உதாரணங்களையும் எடுத்துக் கூறினேன். 
 
அதன் பிறகு, திமுக தலைவர்  கருணாநிதி தன் நிலையை தலை கீழாக மாற்றி, முதலமைச்சரோ, அமைச்சரோ பேரவையில் அறிவித்து விட்டால், அவைகளை நடைமுறைப் படுத்தித் தான் ஆக வேண்டும்.  இல்லாவிட்டால், 'உறுதிமொழிக் குழு' கேள்வி எழுப்பும் என்று கூறி, இவை எல்லாம் செயல்படுத்தப்படும் அறிவிப்புகள் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.   அவரது மைந்தர், திரு.மு.க.ஸ்டாலின்  இது 110 ஆட்சி என்று கூறி, இதில் ஐம்பது சதவீதமாவது நிறைவேற்ற முடியுமா என்று கேள்வி கேட்கிறார்.  இதில் எதையுமே நிறைவேற்ற முடியாது என்று பொருள்படவும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருப்பதால், அதைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி இவர்கள் மக்களை ஏமாற்றி  வருகிறார்கள். ..
 
ஸ்ரீரங்கம் விழாவில் சாதனைகளை பட்டியலிட்ட அமைச்சர்கள்!
 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பெருமக்களும் பிரமுகர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி அவரை புகழ்ந்து உரைத்தனர். 
 
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், முதல்வரின் சட்டமன்ற தொகுதியாகும். இந்த தொகுதிக்கு இதுவரை 3 முறை வந்துள்ள முதல்வர் நேற்று 4-வது முறையாக அங்கு வந்து பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
 
தாலிக்கு தங்கம், மூன்று சக்கர சைக்கிள், பசுமை வீடு, விபத்தில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு உதவிக்தொகை போன்ற பல உதவிகளை முதல்வர் ஜெயலலிதா தன் கையால் வழங்கினார். சரியாக 5.10 மணி அளவில் அவர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக அரசு கொறடா ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., முன்னுரை நிகழ்த்தினார். அப்போது அவர் அமுத சுரபியாய் திகழ்ந்து பசிப்பிணி போக்கிய மணிமேகலையுடன் முதல்வர் ஜெயலலிதாவை ஒப்பிட்டு பேசினார்.
 
மரம் தனக்காக வளர்வதில்லை. ஆறு தனக்காக ஓடுவதில்லை என்று பேசிய மனோகரன், முதல்வரால்தான் தமிழகம் பிழைத்தது என்று புகழ்ந்து பேசினார். மேலும் 3 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தபோது மழை பெய்ததையும் மனோகரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் டி.பி. பூனாட்சி, தங்கமணி ஆகியோர் பேசினார்கள். இவர்கள் முதல்வர் வழங்கிய கலவை சாதங்கள் பற்றி புகழ்ந்து பேசினார்கள். பள்ளிக்குழந்தைகள் வீட்டில் கூட சாப்பிடுவது இல்லை. கலவை சாதங்கள் வழங்கப்படுவதால் பள்ளிக்கே சென்று விடுகிறார்கள் என்று அமைச்சர் தங்கமணி பேசியபோது கரவொலி எழுந்தது.
 
அதைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியபோது உயர்கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அம்மா என்று புகழ்ந்து பேசினார். முதல்வரை தியாகத்தலைவி என்றும் அவர் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் முதல்வரின் சாதனைகளை பட்டியலிட்டார். இப்படியாக விழாவில் பேசிய அனைத்து பிரமுகர்களும் முதல்வரின் சாதனைகளை பட்டியலிட்டனர். வண்ணத்துப்பூச்சிக்கும் பூங்கா அமைத்தவர் முதல்வர் என்றும் இவர்கள் புகழ்ந்து பேசினர். ஸ்ரீரங்கம் மேலச்சித்திரை வீதி,தெற்கு சித்திரை வீதியில் நடந்த இந்த விழாவில் ஆண்களும் பெண்களுமாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டியிருந்தனர். இந்த விழாவையொட்டி ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
 

No comments:

Post a Comment