Friday, June 14, 2013

இரண்டு மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவது தொடர்பான அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

Friday, June 14, 2013
இலங்கை::13வது திருத்தச் சட்டமூலத்தில் இரண்டு மாகாணங்களை இணைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்குவது தொடர்பான அரசாங்கத்தின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
இந்த யோசனை 13வது திருத்த சட்டத்தின் திருத்தமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
 
அதேநேரம், தேசிய கொள்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்க முன்னர் சகல மாகாண சபைகளினதும் அனுமதி பெறப்பட வேண்டுமென்ற பிரிவை மாற்றியமைப்பது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது யோசனை மற்றும் 13வது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய திருத்தங்கள் குறித்து சகல கட்சிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
 
13வது திருத்தச்சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவையில் கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. முஸ்லிம் காங்கிரஸ் தமது தரப்புக் கருத்துக்களை முன்வைத்தது. அதுபோல ஏனைய கட்சிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தன.
 
கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கமைய இத்திருத்தம் அரசியலமைப்பின் 19வது திருத்தமாக அமையலாம். இதனை அவசர சட்டமாக செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளோம். இரண்டாவது யோசனை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விரிவாகக் கலந்துரையாட வேண்டிய தேவை இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
 
இதற்கமைய பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துக் கலந்துரையாடவுள்ளோம். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருந்தது. எனினும், அதற்குப் பல கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கும் மீண்டுமொரு சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் 13வது திருத்தச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆராய்வதற்கு தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.
 
இவ்விடயத்தை கூடிய விரைவில் தெரிவுக்குழுவில் ஆராய்ந்து தீர்மானமொன்றுக்கு வருவதற்கே அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பது தொடர்பில் செவ்வாய்க்கிழமை சபாநாயகருடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும். தெரிவுக்குழுவின் கால எல்லை உள்ளிட்ட விடயங்கள் குறித்து சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்க முடியும். எதுவாகவிருந்தாலும் கூடிய விரைவில் தெரிவுக்குழுவின் ஊடாக தீர்மானமொன்றுக்கு வரவே அரசு எதிர்பார்த்துள்ளது.
வட மாகாண சபை தேர்தல்
செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
அதற்கு முன்னர் 13வது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எந்தவொரு கட்சியோ தெரிவுக் குழுவிற்கு வந்தாலும் வரவிட்டாலும் அதன் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும்.
 
13வது திருத்தச் சட்டமூலத்தை திருத்துவது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்விடயத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு நாம் அடிபணியப்போவதில்லை. எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்கிக் கூறுவோம். எதுவாகவிருந்தாலும் ஜனநாயக நாடென்ற ரீதியில் எமது பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்க்க வேண்டும்.
13வது திருத்தச் சட்டமூலம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நாட்டில் பொதுவாக எழுந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்கள் அவசரமாக முடிவெடுத்து மற்றொரு நாட்டின் பலவந்தத்துடன் கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்தமே இந்த 13வது திருத்தச்சட்டம் என்ற கருத்து ஒருபக்கம் உள்ளது. இதனைத் திருத்தியமைப்பது அவசியமானது என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர் என்றார்.
 
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், குறித்த திருத்தச்சட்டமூலத்தை திருத்தியமைத்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.
 
13வது திருத்தச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் திருத்தங்களை காலதாமதப் படுத்தாமல் கூடிய விரைவில் நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment