Thursday, June 20, 2013
இலங்கை::காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்பதனை இந்தியாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இது தொடர்பிலான விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பாதுகாப்பிற்கும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதனால் இவ்வாறு காவல்துறை அதிகாரங்களை பகிர முடியாது என தெளிவுபடுத்தப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காத்திரமான தீர்வுத் திட்டம் ஒன்றையே ஜனாதிபதி 13 பிளஸ் என கருதியதாகவும், அதனை காவல்துறை அதிகாரங்களை வழங்குவதாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்திய உயர் ராஜதந்திரிகளுக்கு தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்ததாகவும், இறுதி நேரத்தில் இலங்கையை இந்தியா கைவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டால் வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குழப்ப நிலைமைகள் ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment