Thursday, June 20, 2013
இலங்கை::திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவரைத் தாக்கியதாகக் கூறப்படும் மாணவனை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நுகேகொடை நீதவான் களுபோவில வைத்தியசாலைக்கு சமூகமளித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஒருவித வில்லையை உட்கொண்ட காரணத்தினால் பொலிஸ் பாதுகாப்புடன் சந்தேகநபரான மாணவன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 15 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான மாணவன் திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவர் மீது கூரான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
காயமடைந்த நிலையில் சட்ட பீட தலைவர் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க கூறினார்.
குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கான திட்ட அறிக்கையொன்றை உரிய தினத்திற்கு முன்னர் வழங்க சந்தேகநபரான மாணவர் தவறியதை அடுத்து, சட்ட பீட தலைவர் ஏற்றுக்கொள்வதை நிராகரித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனால் கோபமுற்ற மாணவன் கூரான ஆயுதத்தினால் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment