Monday, June 10, 2013

உயிர் இழப்புகளை குறைக்க ரோபோ வீரர்களை உருவாக்குகிறது இந்தியா!!

Monday, June 10, 2013
புதுடெல்லி::எதிர்காலத்தில் ஆளில்லா போர் முறையை பின்பற்றுவதற்காக, ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபடவுள்ளதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய(டி.ஆர்.டி.ஓ) தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
 
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் புதிய தலைவர் அவினாஸ் சந்தர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
எதிர்காலத்தில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படும் விதத்தில் ரோபோ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இது புது திட்டம். இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வருகின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படுவார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீரருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லையில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.
 
மனிதர்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு தகுந்தபடி ரோபோ வீரர் செயல்படுவார். போரில் மனித உயிரிழப்பை தவிர்ப்பதற்கு ரோபோ வீரர்களை உருவாக்குவது அவசியம். வெடி குண்டு செயல் இழக்கச் செய்யும் பணி, கதிரியக்க பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு செல்வது போன்றவற்றில் ரோபோ ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது. ரோபோ வீரர் என்பது ஒருபடி மேலானது. எதிரியை அடையாளம் காணும் விதத்தில் தகவல் தொடர்பு உட்பட பலவித தொழில்நுட்பங்கள் அதில் இருக்கும்.
 
ரோபோ வீரர்களை உருவாக்கி அவர்களை எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்ப குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும். ஏற்கனவே 6 நாடுகள் ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவினாஸ் சந்தர் கூறினார்.
 

No comments:

Post a Comment